சத்தீஸ்கரில் சரிகிறது நக்சல் ஆதிக்கம்: போலீசிடம் 22 பேர் சரண்
சத்தீஸ்கரில் சரிகிறது நக்சல் ஆதிக்கம்: போலீசிடம் 22 பேர் சரண்
UPDATED : ஜூலை 11, 2025 10:37 PM
ADDED : ஜூலை 11, 2025 10:08 PM

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட 22 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.
நாட்டில் நக்சலைட்களின் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சத்தீஸ்கரில் இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், மாநில போலீசார், சிறப்பு கமாண்டோக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில், நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் சரணடைந்து வருகின்றனர். இதனால் நக்சல்களின் ஆதிக்கம் குறைந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 22 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 8 பேர் பெண்கள். சரணடைந்தவர்களில் பலருக்கு மொத்தம் ரூ.37.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள், குதுல், நெல்நர் மற்றும் இந்திராவதி பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். தற்போது அவர்கள் சரணடைந்ததால், நக்சல் அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சரணடைந்தவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நக்சல்களின் வெற்று வாக்குறுதியால் ஏமாற்றம் அடைந்தோம். அந்த அமைப்பில் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. தங்களது சொந்த மாவட்டங்களில் நடந்த வளர்ச்சி பணிகளை பார்த்து மற்றவர்களை போல், சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக சரணடைந்தாக தெரிவித்துள்ளனர்.