வெளிமாநில நக்சல் ஊடுருவல்? கர்நாடகாவில் கண்காணிப்பு!
வெளிமாநில நக்சல் ஊடுருவல்? கர்நாடகாவில் கண்காணிப்பு!
ADDED : மார் 21, 2025 03:43 AM

பெங்களூரு, : ''நக்சல் இல்லாத மாநிலம் கர்நாடகா என, அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து நக்சல்கள், கர்நாடகாவுக்குள் ஊடுருவதை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மேல்சபையில் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில் பா.ஜ., உறுப்பினர் ரவியின் கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
கர்நாடகா நக்சல் பாதிப்பு இல்லாத மாநிலம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நக்சல் தடுப்பு படையை கலைக்கும்படி உத்தரவிடப்பட்டது. கேரளா உட்பட அக்கம், பக்கத்து மாநிலங்களில் இருந்து, நக்சல்கள் கர்நாடகாவில் ஊடுருவ வாய்ப்புள்ளது. இவர்களை கண்காணிக்கும் பொறுப்பு, உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி 6ம் தேதியன்று, மாநில தலைமை செயலர் தலைமையில் நடந்த, மாநில அளவிலான நக்சல் சரணாகதி கமிட்டி கூட்டத்தில், நக்சல்களை சரண் அடைய வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநிலத்தில் நக்சல் சரணாகதி மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், இதுவரை 22 பேர் சரண் அடைந்துள்ளனர். நக்சல்களை கட்டுப்படுத்த 201.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.