போலீசாருக்கு தகவல் அளித்த பெண்ணை கொலை செய்த நக்சல்
போலீசாருக்கு தகவல் அளித்த பெண்ணை கொலை செய்த நக்சல்
ADDED : டிச 08, 2024 04:26 AM
பிஜாப்பூர்: சத்தீஸ்கரில், போலீசாருக்கு உளவு தகவல் அளித்ததாகக் கூறி அங்கன்வாடி பெண் ஊழியரை நக்சல் அமைப்பினர் கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
சத்தீஸ்கரில் பிஜாப்பூர் மாவட்டத்தின் திமாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பதம், 45. இவர், அங்குள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
அவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நக்சல் கும்பல் நேற்று முன்தினம் இரவு நுழைந்து தாக்குதல் நடத்தியது.
அப்போது, லட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை வீட்டின் முற்றத்தில் வீசிவிட்டு தப்பியோடிய அக்கும்பல், அப்பகுதியில் சில துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றது.
போலீசாருக்கு உளவு பார்த்து தகவல் அளித்ததால், இந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கரில், நடப்பாண்டில் மட்டும் 60க்கும் மேற்பட்டோரை நக்சல் அமைப்பினர் இதுபோல் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.