மனைவியுடன் 'செல்பி' எடுத்து சிக்கிய நக்சல் ராமச்சந்திர ரெட்டி
மனைவியுடன் 'செல்பி' எடுத்து சிக்கிய நக்சல் ராமச்சந்திர ரெட்டி
ADDED : ஜன 23, 2025 01:54 AM

புவனேஸ்வர்,
பல ஆண்டுகளாக 'டிமிக்கி' கொடுத்து வந்த நக்சல் தலைவர் ராமச்சந்திர ரெட்டி, மனைவியுடன் எடுத்த 'செல்பி'யால் பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் - ஒடிசா எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நடத்திய தேடுதல் வேட்டையில், நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர் ராமச்சந்திர ரெட்டி உட்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் ராமச்சந்திர ரெட்டி பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளாக பாதுகாப்பு படையினருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ராமச்சந்திர ரெட்டி, மனைவியுடன் எடுத்த செல்பி படத்தால் பாதுகாப்பு படையினரின் இலக்காக மாறினார்.
நெட்வொர்க்
இது குறித்து, பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆந்திராவின் சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி என்ற சலபதி, 60, பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தி உள்ளார். 2008 பிப்., 15ல், ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில், 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் மறைந்த ராமகிருஷ்ணா மூளையாகச் செயல்பட்டிருந்தாலும், அதை களத்தில் நின்று செய்தவர் ராமச்சந்திர ரெட்டி.
கடந்த சில ஆண்டுகளாக, சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தாரபாவில் தங்கியிருந்த அவர், முழங்கால்களில் ஏற்பட்ட பிரச்னைகளால் பயணிக்கவில்லை.
ஒடியா, தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய ராமச்சந்திர ரெட்டி, ஒடிசாவின் பின்தங்கிய மாவட்டங்களான காந்தமால், கலஹண்டியில் நக்சல் நடவடிக்கைகளை அமைத்து, நெட்வொர்க்கை விரிவுபடுத்தினார்.
கண்காணிப்பு
ஆந்திராவில் இருந்த காலத்தில், ஆந்திரா - ஒடிசா எல்லை சிறப்பு மண்டல குழுவின் துணைத் தளபதி அருணா என்கிற சைதன்யா வெங்கட் ரவியை, அவர் திருமணம் செய்தார்.
அப்போது, மொபைல் போனில் அருணாவுடன் ராமச்சந்திர ரெட்டி செல்பி எடுத்தார்.
ஆந்திராவில் 2016ல், நக்சல் - பாதுகாப்பு படையினருக்கு இடையே சண்டை நடந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்து ஒரு மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த போது, மனைவி அருணாவுடன் ராமச்சந்திர ரெட்டி எடுத்த புகைப்படம் கிடைத்தது.
மேலும் அந்த போனில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றை அடிப்படையாக வைத்து, ராமச்சந்திர ரெட்டியின் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையினர், கரியாபந்த் மாவட்டத்தில் அவரை சுட்டுக் கொன்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

