நக்சல்களின் ஆயுத தொழிற்சாலை: சத்தீஸ்கரில் அழித்தது பாதுகாப்பு படை
நக்சல்களின் ஆயுத தொழிற்சாலை: சத்தீஸ்கரில் அழித்தது பாதுகாப்பு படை
ADDED : டிச 23, 2025 07:36 AM

சுக்மா: சத்தீஸ்கரில் நக்சல்களால் இயக்கப்பட்ட ஆயுதத் தொழிற்சாலையை பாதுகாப்புப் படையினர் அழித்து, எட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் கைப்பற்றினர்.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, நக்சல்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் சுக்மா மாவட்டத்தின் மீனகட்டா பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் சட்டவிரோதமாக ஆயுத தொழிற்சாலை இயங்கி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, அப்பகுதியில் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் நக்சல் அமைப்பினர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்த ஆயுத தொழிற்சாலையை கண்டறிந்து அழித்தனர்.
இங்கு, எட்டு ஒற்றைக்குண்டு துப்பாக்கிகள், ஐந்து மின்சார டெட்டனேட்டர்கள், 2 கிலோ வெடிபொருள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் அமோனியம் நைட்ரேட், வெல்டிங் இயந்திரம், எட்டு வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சுக்மா மாவட்ட எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது:
இந்த பிராந்தியத்தில், ஆயுத நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, நக்சல்கள் இந்த ஆலையை இயக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற வினியோக வலையமைப்பை வேரறுக்கும் நடவடிக்கைகள் தொடரும். கடந்த 2024 முதல் சுக்மாவில் 599 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்; 460 பேர் கைதாகி உள்ளனர். 71 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

