சிக்கமகளூரில் காணாமல் போன நக்சல் 20 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் கைது
சிக்கமகளூரில் காணாமல் போன நக்சல் 20 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் கைது
ADDED : பிப் 17, 2024 11:24 PM

சிக்கமகளூரு : சிக்கமகளூரிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன் தப்பி சென்ற நக்சல்வாதி சுரேஷ், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா, அங்கடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். நகசல்வாதியான இவர், மலைப் பிரதேச பகுதிகளில் பல்வேறு நக்சல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அவரை பிடிக்க நக்சல் தடுப்பு படைகள் தேடி வந்தனர். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே, வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு தப்பி சென்றார்.
இவர் மீது, சிருங்கேரி போலீஸ் நிலையத்தில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரை போலீசார் தேடி வந்தனர். இவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவின் கண்ணுாரில் வனப்பகுதியில் சுற்றி திறந்த போது, யானை தாக்கி படுகாயம் அடைந்த நபரை மீட்டு விசாரித்த போது, நக்சல்வாதி என்பது தெரிய வந்தது.
உடனே கர்நாடக போலீசார், கேரளா சென்று அவரை கைது செய்தனர். இவரை சிருங்கேரிக்கு அழைத்து வரும் நடைமுறைகள் நடந்து வருகின்றன. முக்கியமான நக்சல் பிரமுகரான இவரை கைது செய்ததன் மூலம், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.