ADDED : டிச 06, 2024 12:54 AM
பிஜப்பூர், சத்தீஸ்கரின் பிஜப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் கோட்டத்தில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில், பிஜப்பூர் மாவட்டம் பிரியாபூமி கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுகு பார்சா, பா.ஜ.,வில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இவரை, கடந்த 2ம் தேதி நக்சல்கள் கடத்தினர். போலீசார் தேடி வந்த நிலையில், நக்சல்கள் அவரை கொலை செய்து அவரது கிராமத்திற்கு அருகே உடலை நேற்று முன்தினம் இரவு வீசிச் சென்றனர். அந்த இடத்தில் நக்சல்களின் பிரசுரங்களும் காணப்பட்டன.
அந்த பிரசுரங்களில், 'சுகு பார்சா, பா.ஜ., கட்சியில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றியதால் கொலை செய்தோம். இந்த பகுதியில் உள்ள பா.ஜ., உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகவில்லை என்றால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதே போல் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த மற்றொரு சம்பவத்தில், சுக்ராம் அவலாம் என்ற பஞ்சாயத்து தலைவர் நக்சல்களால் காட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
பிஜப்பூரில் வசித்து வந்த அவர், விவசாய பணிக்காக காதேர் கிராமத்துக்கு நேற்று முன்தினம் வந்த போது இந்த கொலை நடந்துள்ளது. அப்பகுதியில் போலீஸ் முகாம் அமைக்க உதவியதற்காக அவரை கொன்றதாக நக்சல்கள் பிரசுரங்களில் குறிப்பிட்டுள்ளனர். நக்சல்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.