UPDATED : ஏப் 05, 2025 07:54 PM
ADDED : ஏப் 05, 2025 07:52 PM

தாண்டேவாடா: '' நக்சலைட்கள் ஆயுதங்களை கைவிட்டால், மத்திய, மாநில அரசு பாதுகாக்கும். தவறினால், அவர்களை பாதுகாப்பு படையினர் கையாள்வார்கள்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: துப்பாக்கிச்சூட்டிற்கும், வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது. நக்சலைட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட் கொல்லப்படும் போது, இந்த பகுதியில் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த பகுதிக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. நக்சலைட்களை சரணடையச் செய்தால், அந்த கிராமங்கள் நக்சலைட் இல்லா கிராமம் என அறிவிக்கப்படுவதுடன், அக்கிராமம் வளர்ச்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்து உள்ளார். அனைவரும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். உங்களை இந்திய அரசும், சத்தீஸ்கர் அரசும் பாதுகாக்கும்.
கடந்த மூன்று மாதங்களில் 521 நக்சல்கள் சரணடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 881 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைபவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவார்கள். ஆயுதங்களை தூக்குபவர்கள் ஆயுதப்படையினரால் கையாளப்படுவார்கள். பஸ்டர் பகுதியானது, பயத்திற்கானது என்ற நிலை மாறி, எதிர்காலத்திற்கானது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்படும்.
முன்பு இந்த பகுதியில் இருந்து யாரும் பேச மாட்டார்கள். இங்கு யாரும் செல்ல வேண்டாம் என்றே கூறுவார்கள். ஆனால், தற்போது 50 ஆயிரம் ஆதிவாசி சகோதர, சகோதரிகளுடன் ராமநவமி மற்றும் அஷ்டமியை இந்த பகுதியில் கொண்டாடுகிறோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.