தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் தமிழர்: மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் தமிழர்: மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
UPDATED : ஆக 18, 2025 11:01 PM
ADDED : ஆக 18, 2025 12:16 AM

புதுடில்லி:துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ல் ராஜினாமா செய்தார்.
பதவிக்காலம் முடிவடையும் முன்னரே அவர் ராஜினாமா செய்தது, டில்லி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய பா.ஜ., அரசுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் பதவி விலகியதாகவும் கூறப்பட்டது.
மூன்று நாட்கள்
இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்., 9ல் தேர்தல் நடக்கும் என்றும், ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், வரும் 21 வரை மனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடந்தது.
இதில், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து, பல கட்ட ஆலோசனைகள் நடந்தன. முடிவில், மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
பார்லி., குழு கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் நட்டா கூறியதாவது:
துணை ஜனாதிபதி தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில், மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார். அவரை போட்டியின்றி தேர்வு செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேசுவோம்.
இது தொடர்பாக, ஏற்கனவே அக்கட்சிகளுடன் பேசி உள்ளோம். தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிமுகம்
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நாளை தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 21ல், சி.பி.ராதா கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று, கூறப்படுகிறது. அந்த நிகழ்வில், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பர் என, தகவல் வெளியாகி உள்ளது.
தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
பிரதமருக்கு நன்றி! தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை தேர்வு செய்ததற்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி. தேசத்துக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. என் கடைசி மூச்சு உள்ள வரை நாட்டுக்காக கடினமாக உழைப்பேன். - சி.பி.ராதாகிருஷ்ணன்
பயோ - டேட்டா
1957 அக்., 20: திருப்பூரில் பிறந்தார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ., முடித்துள்ளார்.
1996: தமிழக பா.ஜ., செயலரானார்.
1998, 1999: கோவையில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு.
2003 - 2006 : தமிழக பா.ஜ., தலைவராக இருந்தார். நதிநீர் இணைப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுதும், 93 நாளில் 19,000 கி.மீ., துாரம் ரத யாத்திரை நடத்தினார்.
2004: இந்தியா சார்பில், ஐ.நா., சபைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம் பெற்றிருந்த இவர், அங்கு உரையாற்றினார்.
2016: தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வகித்தார்.
2023 பிப்., 12: ஜார்க்கண்ட் கவர்னரானார்.
2024 மார்ச் 19: கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவி வகித்தார்.
ஜூலை 27: மஹாராஷ்டிரா கவர்னரானார்.
2025 ஆக., 17: தே.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு.
3வது தமிழர்
எஸ்.ராதாகிருஷ்ணன் (1952 --- 1962), ஆர்.வெங்கட்ராமனுக்கு (1984 -- 1987) பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ள மூன்றாவது தமிழர், சி.பி.ராதாகிருஷ்ணன்.
அனைத்து கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும்
பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு, கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா எடுத்து பெருமைப் படுத்தியதைத் தொடர்ந்து, தமிழர் ஒருவருக்கு மிக உரிய அந்தஸ்தை அளித்திருக்கும் பிரதமர் மோடிக்கும், பா.ஜ., தலைமைக்கும், ஒரு தமிழராக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் என்ற முறையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும், துணை ஜனாதிபதி தேர்தலில், ராதாகிருஷ்ணனை ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்றும் கோருகிறேன். தமிழகத்தின் பா.ஜ., தொண்டர்கள் அனைவரும், இந்த அறிவிப்புக்காக, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்து, இறைவனுக்கு மனதார நன்றி தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
- நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,