பீஹார் சட்டசபை தேர்தல்; பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி
பீஹார் சட்டசபை தேர்தல்; பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி
ADDED : அக் 12, 2025 06:36 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி நிறைவு செய்தது. பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 தொகுதிகளுக்கு நவ., 6 மற்றும் 11ல், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், பாஜ, கூட்டணி - காங்., கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சி, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பாஜ மற்றும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சிக்கு 29 இடங்களும், ராஷ்ட்ரீய லோக் சமதா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
15 தொகுதிக்கு குறைவாக கொடுத்தால் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறியிருந்த மத்திய அமைச்சர் ஜிதம் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 6 இடங்களே ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.