நம்பிக்கையில்லா தீர்மானமா? ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் மத்திய அமைச்சர்
நம்பிக்கையில்லா தீர்மானமா? ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் மத்திய அமைச்சர்
UPDATED : டிச 10, 2024 10:34 PM
ADDED : டிச 10, 2024 09:51 PM

புதுடில்லி: '' ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும்'', என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதில் 50க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.
இவர்களில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.,க்கள் அடக்கம். தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலையில், ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் கேள்வி எழுப்ப அனுமதி வழங்கப்படுகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட வேண்டும். நிச்சயம் நிராகரிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.