ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை பொருத்த திட்டம் என்.டி.எம்.சி.,யில் ரூ.30.84 கோடி அனுமதி
ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை பொருத்த திட்டம் என்.டி.எம்.சி.,யில் ரூ.30.84 கோடி அனுமதி
ADDED : அக் 10, 2025 02:24 AM
பு துடில்லி:என்.டி.எம்.சி., எனப்படும், டில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில், 30.84 கோடி ரூபாய் செலவில் புதிய ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி, நகராட்சி பகுதியில் நீர் வினியோக முறையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 15 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்களை புதிதாக பொருத்த, என்.டி.எம்.சி., திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, என்.டி.எம்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த திட்டத்தின் முதற்கட்டத்திற்கு, 'என்.டி.எம்.சி., பகுதியில் தண்ணீர் வினியோகத்தை பலப்படுத்தும் முறை' என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்னும், 12 மாதங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, தற்போதைய மெக்கானிக்கல் அல்லது பழுதடைந்த மோட்டார்கள் மாற்றப்பட உள்ளன.இப்போதைய நிலையில், முதற்கட்டமாக, 15 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
'அட்வான்ஸ்டு மீட்டரிங் இன்பராஸ்டெக்சர்' எனும் முறைப்படி செயல்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர்கள், அப்போதைய நேரத்தில் என்னென்ன வீதத்தில் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது வீட்டிற்கு தகவல் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தண்ணீர் பயனாளர்கள் டிஜிட்டல் ரீதியாக தங்கள் தண்ணீர் பயன்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.
மேலும், எங்கெங்கு தண்ணீர் வீணாகுகிறதோ அதையும் இந்த ஸ்மார்ட் மீட்டர் காண்பித்து விடும்.
இப்போது, முதற்கட்டமாக, 30.84 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின், தேவைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.