ADDED : ஜூலை 08, 2025 10:05 PM

புதுடில்லி:பிரதமரின், 'ஏக் பெட் மா கே நாம்' - அம்மாவின் பெயரில் மரம் என்ற திட்டத்தில், மத்திய டில்லியில், 3,000 மரக்கன்றுகள், 35 லட்சம் புல் புதர்கள் மற்றும் 3,946 மூங்கில் கன்றுகள் நட புதுடில்லி முனிசிபல் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் குல்ஜீத் சிங் சாஹல் கூறியதாவது:
பிரதமரின், 'ஏக் பெட் மா கே நாம்' திட்டம் ஏப்ரல் 1ம் தேதி துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்,
மத்திய டில்லியில் இந்த ஆண்டு, 80 முக்கியச் சாலைகளில் 3,000 மரக்கன்றுகள், 35 லட்சம் புல் புதர்கள் மற்றும், 3,946 மூங்கில் கன்றுகள் நடப்படுகிறது.
மேலும், மக்கும் தன்மை கொண்ட தேங்காய் ஓடுகளால் ஆன, 4,000 தொங்கும் மலர் கூடைகள் அமைக்கப்படும்.
பசுமை உள்கட்டமைப்பை மேம்படுத்த நேரு பூங்கா, எய்ம்ஸ் மற்றும் அக்பர் சாலை உள்ளிட்ட இடங்களில் ஒன்பது புதிய பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.
வரும், 27ம் தேதி ஹரியாலி தீஜ் சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, 20 முக்கிய இடங்களில் ஒரே நாளில் 240 மரக்கன்றுகள், 36,000 புதர்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அக்பர் சாலை, மந்திர் மார்க், கிருஷ்ண மேனன் மார்க் மற்றும் சுப்பிரமணிய பாரதி மார்க் -சாலை ஓரங்களில், 4,000 மூங்கில் கன்றுகள் நடப்படும்.
புதுடில்லி முனிசிபல் கவுன்சில் ஏற்கனவே, 1,150 ஏக்கர் பசுமைப் பகுதியை பராமரிக்கிறது. டில்லி மாநகரின் மொத்த பசுமைப் பரப்பில் 55 சதவீதம் கவுன்சில் நிர்வாகத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

