ADDED : நவ 09, 2024 11:24 PM

ராம்நகர்: பேரனுக்கு முடி சூட்டுவதற்காக 91 வயதிலும் தேவகவுடா பிரசாரம் செய்வதாக, சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர் கிண்டல் அடித்துள்ளார்.
ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் யோகேஸ்வர், நேற்று ஹூசனஹள்ளி கிராமத்தில் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:
இந்த கிராமத்தில் உள்ள பிசாலிம்மா தேவி, எங்கள் வீட்டு கடவுள். நான் அரசியலில் ஈடுபட துவங்கிய காலத்தில் இருந்து, சென்னப்பட்டணா மக்கள் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இம்முறையும், உங்களின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. நமது தொகுதியை வளர்ச்சி அடைய செய்வதற்காக, நான் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இத்தொகுதிக்கு அரசு, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, தொகுதி வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் கண்ணீர் வடிக்கும் அவரை நம்பாதீர்கள். தேவகவுடாவுக்கு 91 வயது ஆகிறது. தனது பேரனுக்கு முடி சூட்டுவதற்காக, போராட்டம் நடத்துகிறார். யார் சிறந்தவர் என்பதை நினைத்துப் பார்த்து, மக்கள் ஓட்டுப் போட வேண்டும்.
சட்டசபை தேர்தலில் ம.ஜ.த.,வை வெற்றி பெற வைக்காமல் துாங்க மாட்டேன் என்று கூறிய தேவகவுடா, தற்போது காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரையிலும், பேரனை வெற்றி பெற வைக்கும் வரையிலும் துாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவரது பேச்சை, மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கூறினார்.