நீரஜ் சோப்ரா, மனு பாகர் 'கிராக்கி' கூடுது: கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்க விளம்பர நிறுவனங்கள் தயார்
நீரஜ் சோப்ரா, மனு பாகர் 'கிராக்கி' கூடுது: கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்க விளம்பர நிறுவனங்கள் தயார்
ADDED : ஆக 22, 2024 10:41 AM

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதித்த இந்திய நட்சத்திரங்கள் விளம்பர படங்களில் நடிக்க கோடிகளில் கொட்டிக்கொடுக்க விளம்பர நிறுவனங்கள் தயாராக உள்ளன.
நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் என பிரபலமானவர்களை பயன்படுத்தி நிறுவனங்கள் விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களின் பொருட்கள் மக்கள் மத்தியில் சென்று சேர்வது எளிதாகிறது. அவர்களின் பிரபலத்தை பொறுத்து அவர்கள் நடிக்கும் விளம்பரங்களும், ஊதியங்கள் மாறுபடுகின்றன. அந்த வகையில், அண்மையில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள் தங்களின் விளம்பர தொகையை உயர்த்தியுள்ளனர்.
ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த நீரஜ் சோப்ரா, விளம்பரங்களில் நடிப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என அவர் ஒப்பந்தம் செய்துள்ள மதிப்பு மட்டும் ரூ.330 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்த மனு பாகரின் மதிப்பும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக ஒரு விளம்பர படத்தில் நடிக்க, மனு பாகர் 25 லட்ச ரூபாய் வரை வாங்கி வந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் அது 6 மடங்கு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரபல குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமான மனு பாக்கர் அதற்கு 1 கோடியே 50 லட்ச ரூபாய் வரை தொகை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் 40 நிறுவனங்கள் விளம்பரத்திற்காக முட்டி மோதுகின்றன.
மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் பைனல் வரை சென்று, 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், ஒலிம்பிக் முன்னதாக விளம்பரப் படத்தில் நடிப்பது அல்லது பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்ள ரூ.25 லட்சம் வரை வாங்கி உள்ளார். ஒலிம்பிக் பிறகு, ரூ.75 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.