'நீட்' தேர்வு, தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் எதுவுமே வேண்டாம்!: மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம்
'நீட்' தேர்வு, தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் எதுவுமே வேண்டாம்!: மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம்
ADDED : ஜூலை 26, 2024 12:30 AM

பெங்களூரு: 'நீட்' தேர்வு, தொகுதிகள் மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல், வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் என, மத்திய அரசுக்கு எதிராக நான்கு கண்டன தீர்மானங்களை கர்நாடக காங்கிரஸ் அரசு, சட்டசபை, மேல்சபையில் நேற்று நிறைவேற்றியது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. அந்த கட்சி ஆட்சிக்கு வந்த 14 மாதங்களிலேயே, அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசின் முறைகேடுகளையும், தோல்விகளையும் குறிப்பிட்டு திணறடிக்கும்படி பா.ஜ., மேலிடம், தங்கள் கட்சியின் மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
பா.ஜ.,வினர் தர்ணா
இதன் அடிப்படையில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த 87 கோடி ரூபாய் முறைகேடு, 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கிய விவகாரங்களை சட்டசபை, மேல்சபையில் குறிப்பிட்டு, பா.ஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், மத்திய அரசின் சில முக்கிய முடிவுகளுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றும்படி, மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததாக தெரிகிறது.
இதன் அடிப்படையில், 'நீட்' தேர்வு, தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, இம்மாதம் 22ம் தேதி நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 23, 24ம் தேதி நிகழ்ச்சி நிரலில் இந்த விஷயங்கள் இடம்பெற்றும், பா.ஜ.,வினர் போராட்டத்தால் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நேற்றும் சட்டசபையில் பா.ஜ.,வினர், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
தொகுதி மறுவரையறை
போராட்டத்துக்கு இடையில், மத்திய அரசின் நான்கு முக்கிய விஷயங்களுக்கு எதிராக சட்டசபையில் கண்டன தீர்மானங்களை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.
அதன் விபரம்:
நாட்டில், 2026 அல்லது அதற்கு பின் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின், சட்டசபை, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்யக்கூடாது.
கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 15ன்படி, பாரபட்சமில்லா, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது தான் ஜனநாயகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தும் முடிவு, ஜனநாயக நடைமுறைக்கும், இந்திய கூட்டமைப்புக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். வெவ்வேறு மாநில சட்டசபைகளின் அதிகார காலம், வெவ்வேறாக இருக்கும்.
ஒரே முறை தேர்தல் நடத்துவதால், தேசிய விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்கியும், உள்ளூர் விஷயங்கள் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பு பலப்படுத்துவது, தேர்தல் பணியாளர்களை நிர்வகிப்பது மற்றும் சமூக ரீதியான இடையூறுகள் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, இந்திய ஜனநாயக நடைமுறையையும், கூட்டாட்சியையும் காக்கும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த கூடாது.
மருத்துவ கல்வி
'நீட்' தேர்வு முறை, கிராமப்புற ஏழை குழந்தைகளின் மருத்துவ கல்வி மீது தீவிரமாக எதிரொலிக்கிறது.
இதனால், பள்ளிக்கல்வியையும் அவர்கள் படிக்க இயலாமல் போகலாம். மேலும், மருத்துவ கல்வியில் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது இந்த தேர்வில் இருந்து, கர்நாடகாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
கர்நாடக அரசு நடத்தும் பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
நீட் தேர்வில் நடக்கும் தொடர் முறைகேட்டை தடுக்கும் வகையில், தேர்வை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
வன பாதுகாப்பு
வனப்பகுதிகளில் மூன்று தலைமுறை அல்லது 75 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மலைவாழ் மக்களுக்கு மட்டுமேநில பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
அதன்பின், வாழ்ந்தவர்களுக்கு நில பட்டா வழங்கும் வகையில், மத்திய வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான நான்கு தீர்மானங்களும் கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. பின், மேல்சபையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டன.

