முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை
முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை
ADDED : ஆக 07, 2024 05:39 PM

புதுடில்லி: ஆகஸ்ட் 11ல் நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
நாடு முழுதும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருந்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஆக., 11ம் தேதி நடத்த உள்ளது. தமிழகத்தில் இருந்து 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த நிலையில் முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 'NEET PG Leaked Materials' என்ற பெயரில் டெலிகிராம் சேனல் செயல்படுவதாகவும், ரூ.70,000 வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் பரவி வருகிறது.
ஏற்கனவே, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விற்பனை விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.