'நீட்' தேர்வு: நிபுணர் குழு பரிந்துரையை செயல்படுத்த முடிவு
'நீட்' தேர்வு: நிபுணர் குழு பரிந்துரையை செயல்படுத்த முடிவு
ADDED : ஜன 02, 2025 11:45 PM

புதுடில்லி: 'மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு நடைமுறை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்துவோம்' என, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடந்த தேர்வின்போது சில மையங்களில் மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறியது.
'நீட் நுழைவுத் தேர்வு நடைமுறையில் எந்த சிக்கலும் இல்லை. சில இடங்களில் சில தனிநபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது.
இந்நிலையில், நீதிபதி கள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
நிபுணர் குழுவின் விரிவான அறிக்கை வந்துள்ளது. அவற்றை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது.
நீட் தேர்வு நடைமுறைகளை மிகவும் வெளிப்படையாகவும், எவ்வித முறைகேடுகளும் இல்லாமலும் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, அவை மேலும் முன்னேற்றம் அடையும். அதனால், இந்த வழக்கின் விசாரணையை, ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக அமர்வு கூறியுள்ளது.

