ADDED : ஜன 17, 2025 02:01 AM
புதுடில்லின.:இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தாண்டும் ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் பேனாவால் குறிக்கும் வகையிலேயே நடக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது.
இந்த தேர்வு, பேனா,- பேப்பர் முறையில் தற்போது நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவு 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது.
மேலும், தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தின.
அதில், ஒரே நாளில், ஒரே ஷிப்டில் வழக்கமான ஓ.எம்.ஆர்., தாளில் பேனாவால் விடையை குறிக்கும் முறையிலேயே தேர்வு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.