நீட் முதுநிலை தேர்வு : ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நீட் முதுநிலை தேர்வு : ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ADDED : ஆக 09, 2024 04:38 PM

புதுடில்லி: நீட் முது நிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 11ம் தேதி நடக்கிறது. இதனை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சில மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், ‛‛ தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைக்க முடியாத சூழல் உள்ளது. குறிப்பிட்ட சில மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால், அனைத்து மாணவர்களின் எதிர்காலத்தையும் சிக்கலில் தள்ள முடியாது. தேர்வை தள்ளி வைக்கக்கோரி வழக்கு தொடர்வது வழக்கமாகி வருகிறது'' எனக்கூறி தேர்வை ஒத்திவைக்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தது.