ADDED : மே 16, 2026 11:34 PM

புதுடில்லி: மருத்துவ இளநிலை படிப்புகளில் சேருவதற் கான 'நீட்' நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுதும் நடந்தது. இதற்கான வினாத்தாள் முன்னரே கசிந்ததாக புகார் எழுந்ததையடுத்து, இந்த தேர்வு ரத்து செய்யப்பட் டது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் குல்கர்னியை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது.
இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
நீட் தேர்விற்கான வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்த குல்கர்னிக்கு, வினாத்தாளை எளிதில் அணுகும் வசதி இருந்தது. இதை தவறாக பயன்படுத்திய அவர், நீட் தேர்வுக்காக தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் ஏப்ரல் மாத இறுதியில், வினாத்தாள் விபரங்களை கசிய விட்டுள்ளார்.
அதற்கான விடைகளையும் கூறிய அவர், மாணவர்களிடம் கட்டண மும் பெற்றுள்ளார். மற்றொரு குற்றவாளியான மனிஷா வாக்மரேவிடம் வினாத்தாள் விபரங்களை குல்கர்னி அளித்து உள்ளார்.
அதன் பின்னரே பிற மாநிலங்களுக்கு நீட் வினாத்தாள் கசிந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
