இறுதி சடங்கில் உயிர்பெற்ற இளைஞர்: அலட்சிய டாக்டர்கள் சஸ்பெண்ட்
இறுதி சடங்கில் உயிர்பெற்ற இளைஞர்: அலட்சிய டாக்டர்கள் சஸ்பெண்ட்
UPDATED : நவ 23, 2024 06:53 AM
ADDED : நவ 23, 2024 06:26 AM

ராஜஸ்தான்: ராஜஸ்தானில், டாக்டர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர், இறுதி சடங்கின் போது திடீரென எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகிதாஷ் குமார், 25. காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், ஆதரவற்ற நிலையில் காப்பகத்தில் வசித்து வந்தார்.
சுயநினைவு
ரோகிதாஷுக்கு ஏற்கனவே பல்வேறு உடல்நல பிரச்னைகள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
ஜுன்ஜுனு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மதியம் 2:00 மணிக்கு ரோகிதாஷ் குமார் உயிரிழந்ததாக அறிவித்தனர். அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு மாற்றப்பட்டது.
போலீஸ் நடைமுறைகள் முடிந்து இரண்டு மணிநேரம் கழித்து, காப்பக பொறுப்பாளர்களிடம் ரோகிதாஷ் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை எரியூட்டும் ஏற்பாடுகளை செய்தனர்.
அதன்பின், சிதையின் மீது உடலை கிடத்திய போது, ரோகிதாஷ் சுயநினைவு பெற்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த காப்பக பொறுப்பாளர்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து ரோகிதாஷை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
குற்றச்சாட்டு
ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக ஜெய்ப்பூர் மருத்துவமனை அறிவித்தது.
'உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், மாற்றுத்திறனாளி இளைஞர் ரோகிதாஷ் உயிர் பிழைத்திருப்பார்' என, காப்பாக பொறுப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜுன்ஜுனு அரசு மருத்துவமனையின் மூன்று டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரோகிதாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.