ADDED : டிச 24, 2024 06:25 AM
நெலமங்களா: பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே கடந்த 21ம் தேதி, கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சந்திரம் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியாகினர். நெலமங்களா போக்குவரத்து போலீசில் வழக்குப்பதிவானது.
விபத்தில் படுகாயம் அடைந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஆரீப், 45 கைது செய்யப்பட்டார். போலீஸ் கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் விபத்து வழக்கை நெலமங்களா டி.எஸ்.பி., ஜெகதீஷ் தலைமையிலான குழு விசாரிக்கும் என, பெங்களூரு ரூரல் எஸ்.பி., சி.கே.பாபா நேற்று கூறினார்.
அந்த குழுவினர் விபத்து நடந்த இடத்தில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாரி ஜிந்தால் தொழிற்சாலையில் இருந்து, பெங்களூருக்கு இரும்புக் கம்பிகளை லாரி டிரைவர் ஆரீப் ஏற்றி வந்தபோது விபத்து நேர்ந்தது.