நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
ADDED : அக் 05, 2025 11:57 PM

காத்மாண்டு: நேபாளத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தின் கிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், கோஷி மாகாணத்தின் இலம் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ரசுவா மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன 4 பேரையும், பஞ்ச்தர் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கிய காணாமல் போன ஒருவரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் உட்பட பலர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் கோஷி, மாதேஷ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி உள்ளிட்ட ஏழு மாகாணங்களில் ஐந்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மேலும், அடுத்து வரும் நாட்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், காத்மாண்டுவிற்குள் வாகனங்கள் நுழைவதற்கும், வெளியேறுவற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.