ஒடிசா பல்கலை விடுதியில் நேபாள மாணவி தற்கொலை: மாணவர்கள் போராட்டம்
ஒடிசா பல்கலை விடுதியில் நேபாள மாணவி தற்கொலை: மாணவர்கள் போராட்டம்
ADDED : பிப் 17, 2025 07:42 PM

புவனேஸ்வர்: ஒடிசா பல்கலை விடுதியில் நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்கலை அந்தஸ்து கொண்ட இந்த கல்வி நிறுவனத்தில் நேபாளத்தை சேர்ந்த மாணவர்கள், கணிசமான எண்ணிக்கையில் படிக்கின்றனர்.
இங்கு மூன்றாம் ஆண்டு படித்து வந்த நேபாளத்தை சேர்ந்த பி.டெக் மாணவி ஞாயிற்றுக்கிழமை மாலை தனது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அங்கு படிக்கும் நேபாள நாட்டவர்கள் உட்பட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளாகத்தில் கூடிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் மாணவி தற்கொலை சம்பவத்தில் பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். பல்கலையை கண்டித்து, விடுதிகளில் இருந்து பலர் வெளியேறினர். வகுப்புகளை புறக்கணிப்பதாகவும் கூறினர்.
'பல்கலைக்கழக அதிகாரிகள் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். கடந்த ஒரு மாதமாக, வளாகத்தில் ஒழுக்கமின்மை குறித்து நாங்கள் புகார் அளித்து வருகிறோம், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை' என்றும் மாணவர்கள் கூறினர்.
மாணவி தற்கொலை விவகாரத்தில், அவரது முன்னாள் காதலரான ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் துன்புறுத்தல்தான் தற்கொலைக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.
மாணவியின் சகோதரரும் துன்புறுத்தலைக் காரணம் காட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஆத்விக் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தற்கொலை செய்து கொண்ட மாணவி, அதே பல்கலையில் படிக்கும் மற்றொரு மாணவருடன் காதலில் இருந்ததாக சந்தேகிக்கிறோம். பாதிக்கப்பட்டவருக்கும் அவரது காதலனுக்கும் ஏற்பட்ட உறவில் ஏற்பட்ட பிரச்னைகள் தான் அவரை இந்த தீவிர நடவடிக்கைக்கு கொண்டு சென்றிருக்கலாம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அறிக்கை:பலகலை வளாகத்தில் நேற்று மாலையில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த உடனேயே, போலீசார் இந்த விஷயத்தை விசாரித்து குற்றவாளியைக் கைது செய்தனர்.
பல்கலை.நிர்வாகம் வளாகத்திலும் விடுதிகளிலும் இயல்பு நிலையை மீட்டெடுக்க முழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வளாகத்தை விட்டு வெளியேறிய மற்றும் வெளியேற திட்டமிட்டுள்ள அனைத்து நேபாள மாணவர்களும் திரும்பி வந்து வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறியதாவது:
ஒடிசாவில் பாதிக்கப்பட்ட நேபாள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க புதுடில்லியில் உள்ள தூதரகம் இரண்டு அதிகாரிகளை அனுப்பியுள்ளது. மாணவர்கள் விடுதியில் தங்கவோ அல்லது வீடு திரும்பவோ விருப்பம் தெரிவித்தால், அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.