புதிய கரன்சியில் இந்திய பகுதிகள் மீண்டும் எல்லை மீறும் நேபாளம்
புதிய கரன்சியில் இந்திய பகுதிகள் மீண்டும் எல்லை மீறும் நேபாளம்
ADDED : நவ 28, 2025 06:14 AM

காத்மாண்டு: நேபாள அரசு, இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் புதிய கரன்சிகளை வெளியிட்டுள்ளது.
இந்தியா - நேபாளம் இடையே 1,850 கி.மீ., துாரத்துக்கு எல்லை பரந்து விரிந்திருக்கிறது. சிக்கிம், மேற்குவங்கம், பீஹார், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் என ஐந்து மாநிலங்கள், நேபாளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
இரு நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகியவை இந்தியாவுக்கு சொந்தமானவை.
கடந்த 2020ல், நேபாள பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு, எல்லையோர இந்தியப் பகுதிகளை சொந்தம் கொண்டாடும் வகையில், புதிய வரைபடத்தை வெளியிட்டது.அப்போது, இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய கரன்சிகளை அந்த நாடு வெளியிட்டுள்ளது. அதில், திருத்தப்பட்ட வரைபடத்தை அச்சிட்டு நேபாளம் மீண்டும் எல்லை மீறியுள்ளது.
நேபாள ராஷ்டிரா வங்கி வெளியிட்ட அந்த புதிய கரன்சியின் மையத்தில் மங்கலான பச்சை வண்ணத்தில் அந்நாட்டின் புதிய வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.
'லும்பினி, புத்தர் பிறந்த இடம்' என்ற வாசகத்துடன் வரைபடத்தின் அருகே அசோக துாணும் அச்சிடப்பட்டுள்ளது.
நோட்டின் இடது பக்கம் எவரெஸ்ட் சிகரம், பின்பக்கத்தில் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி . இதில், இந்திய பகுதியை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய வரைபடம் இடம் பெற்றுள்ளது.

