UPDATED : மே 03, 2025 01:44 AM
ADDED : மே 03, 2025 12:11 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவின் கலிங்கா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மூன்று மாதங்களுக்கு முன், நேபாள மாணவி தற்கொலை செய்த நிலையில், மீண்டும் ஒரு மாணவி நேற்று தற்கொலை செய்ததால் பதற்றம் நிலவுகிறது.
முதலாமாண்டு
ஒடிஷா புவனேஸ்வரில் கே.ஐ.ஐ.டி., எனப்படும் கலிங்கா தொழில்துறை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.
பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி., அச்சுத சமந்தா நடத்தும் இந்த நிகர்நிலை பல்கலையில், வெளிநாட்டு மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
இங்கு, நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள பீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரிசா ஷா, 18, பி.டெக்., கணினி அறிவியல் பாடப்பிரிவில் முதலாமாண்டு பயின்று வந்தார்.
இவர், நேற்று முன்தினம்தான் தங்கியிருந்த விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கே.ஐ.ஐ.டி., பல்கலை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் மரணம் குறித்து வெளியுறவு அமைச்சகத்துக்கும், இங்குள்ள நேபாள துாதரகம் வாயிலாக, அந்நாட்டு அரசுக்கும் தகவல் தரப்பட்டது.
மாணவியின் இறப்பு குறித்து நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் அர்ஷுரானா தேவுபா, வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'நேபாள மாணவி பிரிசா ஷா, தற்கொலை சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராயும் முயற்சிகள் துவங்கியுள்ளன' என, குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பி.டெக்., கணினி அறிவியல் பாடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவியான பிரகிருதி லாம்சல், 20, என்ற மாணவி கடந்த பிப்., 16ல் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
பாலியல் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டார்.
பதற்றம்
மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஒரு நேபாள மாணவி தற்கொலை செய்து கொண்டது, சக மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, பல்கலையில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நேற்று பல்கலை நிர்வாக கட்டடம் முன் கூடியதால் பதற்றம் நிலவியது.