ரூ.38 கோடி ஹவாலா மோசடி நடிகை ரன்யா மீது புதிய புகார்
ரூ.38 கோடி ஹவாலா மோசடி நடிகை ரன்யா மீது புதிய புகார்
ADDED : ஏப் 04, 2025 02:03 AM

பெங்களூரு : தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், 38 கோடி ரூபாய் சட்ட விரோத ஹவாலா பண மோசடியிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
தமிழில், வாகா படத்தில் நடித்த ரன்யா ராவ், கர்நாடகாவைச் சேர்ந்தவர். கன்னடத்திலும் சில படங்கள் நடித்துள்ளார்.
இவர், மார்ச் 3-ல் துபாயில் இருந்து பெங்களூரு வந்தபோது, 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.2 கிலோ, கடத்தல் தங்கக் கட்டிகளுடன் விமான நிலையத்தில் கைதானார்.
இதையடுத்து, நடிகை ரன்யா ராவ், அவரது நண்பர் தருண் ராஜு, கடத்தல் தங்கத்தை விற்க உதவிய நகை வியாபாரி ஷகில் ஜெயின் ஆகியோர் கைதாகினர்.
இந்நிலையில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வருவதோடு, ஹவாலா வழியில் பணத்தை மாற்றும் வேலையிலும் ரன்யா ராவ் ஈடுபட்டார். அவருக்கு ஷகில் ஜெயின் உடந்தையாக இருந்தார்.
இதன்படி கடந்த ஜனவரியில் 11.5 கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ தங்கம், 55 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தையும், பிப்ரவரியில் 11.8 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கம், 11.25 கோடி ஹவாலா பணத்தையும் துபாயில் இருந்து ரன்யா ராவ் கொண்டு வந்தார்.
மொத்தத்தில் துபாயில் இருந்து 40 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ தங்கம், 38 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பெங்களூருக்கு ரன்யா ராவ் கொண்டு வந்துள்ளார்.
இந்த ஹவாலா பணத்தை மாற்றுவதற்கும், தங்கத்தை விற்பனை செய்யவும், அவருக்கு ஷகில் ஜெயின் உதவி செய்துள்ளார்.
ஒவ்வொரு ஹவாலா பரிமாற்றத்துக்கும் தலா, 55,000 ரூபாய் கமிஷனாக ரன்யா பெற்றார்.அவரது வீட்டில் சிக்கிய 2.67 கோடியும் ஹவாலா பணமாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.