பினாமி சொத்து வைத்துள்ளதாக சித்தராமையா மீது புதிய புகார்
பினாமி சொத்து வைத்துள்ளதாக சித்தராமையா மீது புதிய புகார்
ADDED : பிப் 04, 2025 06:30 AM
மைசூரு: முதல்வர் சித்தராமையா, மற்றொரு நெருக்கடியில் சிக்கியுள்ளார். பினாமி சொத்து வைத்துள்ளதாக, சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, லோக் ஆயுக்தாவில் புதிதாக புகார் செய்துள்ளார்.
'முடா' வழக்கில் சிக்கி, முதல்வர் சித்தராமையா ஏற்கனவே விழி பிதுங்கி தவிக்கிறார். லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இவற்றில் இருந்து எப்படி விடுபடுவது என, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி நடந்து கொள்கிறார்.
இதற்கிடையே முதல்வர் மீது புதிதாக புகார் ஒன்று பதிவாகியுள்ளது. மைசூரு லோக் ஆயுக்தாவில் சினேஹமயி கிருஷ்ணா, நேற்று அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
மைசூரின், ஆலனஹள்ளி கிராமத்தின் சர்வே எண் 113/4ல் ஒரு ஏக்கர் நிலத்தை, 1983 டிசம்பர் 15ம் தேதி, ஹனுமேகவுடா, ஹனுமய்யா, கரியப்பா, கெம்பம்மா ஆகியோரிடம் இருந்து, சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி வாங்கினார்.
இந்த நிலத்தை அடிப்படைத் தேவை என்ற வகையில் கையப்படுத்தி 'முடா' அறிவிப்பு வெளியிட்டது. அதன்பின் இந்த நிலத்தை கையகப்படுத்தும் முடிவை 'முடா' கைவிட்டது.
இதே நிலத்தை தன் சகோதரியான, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 2010 அக்டோபர் 20ல், நன்கொடையாக வழங்கினார். இந்த நிலத்தை, பார்வதி 2010 நவம்பர் 11ல், தன் மகன் யதீந்திராவுக்கு கொடுத்தார். இதை யதீந்திரா, 2011 மார்ச் 23ல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
நிலத்தை வாங்கியது முதல்வரின் மைத்துனர். 'முடா' கையகப்படுத்திய நிலத்தை, கையகப்படுத்தும் அறிவிப்பை கைவிட்டதன் பின்னணியில் இருப்பது யார்? இந்த விஷயத்தில், முதல்வர் சித்தராமையாவின் கைவரிசை உள்ளது. மல்லிகார்ஜுன சாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள், பார்வதி பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது, பல சந்தேகங்களை எழுப்புகிறது.
மல்லிகார்ஜுன சாமி, இதுவரை எவ்வளவு நிலத்தை வாங்கி, பார்வதி பெயருக்கு மாற்றினார் என்பதை பற்றி விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

