சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் புதிய கிரிமினல் சட்டங்கள் சேர்ப்பு
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் புதிய கிரிமினல் சட்டங்கள் சேர்ப்பு
ADDED : ஆக 12, 2025 11:43 PM

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்த, 'முத்தலாக்' உள்ளிட்ட பழைய சட்டங்களை நீக்கிவிட்டு, புதிய கிரிமினல் சட்டங்கள் தொடர்பான பாடங்கள், வரும் 2026 - 27 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, அடிப்படை சட்ட அறிவு கிடைக்கச் செய்யும் வகையில், 2013 - 14ம் ஆண்டு முதல், சட்டப்படிப்பு பாடம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதில், அப்போதைய ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட அச்சட்டங்களில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றது போல் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' என, ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், கடந்த ஆண்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, இச்சட்டங்களை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் சேர்க்க, அவ்வாரியத்தின் பாடத்திட்டக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதன்படி ஏற்கனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் இடம்பெற்றிருந்த முத்தலாக், அவதுாறு உள்ளிட்ட பழைய சட்டப்பிரிவுகள் தொடர்பான பாடத்திட்டங்களை நீக்கிவிட்டு, இப்புதிய சட்டங்கள் தொடர்பான பாடங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.