ரூ.15,600 கோடியில் புதிய அணை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் பேச்சு
ரூ.15,600 கோடியில் புதிய அணை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் பேச்சு
ADDED : பிப் 17, 2024 04:47 AM
l எத்தினஹொளே திட்டத்தின் கீழ் முதற்கட்ட பணிகளை முடித்து, சோதனை முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. நடப்பாண்டு அனைத்து பணிகளையும் முடித்து நிர்ணயித்து, கால்வாயில் முழுமையான அளவில் தண்ணீர் பாய்ச்சப்படும். அதன்பின், அணை கட்டும் பணி துவக்கப்படும்.
l வட மாவட்டங்களின் முக்கிய திட்டமான கிருஷ்ணா மேலணை திட்டத்தின், மூன்றாம் கட்ட பணிகளை முடிக்கவும், நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணா தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
l பத்ரா மேலணை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில், 5,300 கோடி ரூபாய் நிதி அறிவித்தது. ஆனால் இதுவரை நிதியுதவி வழங்கவில்லை. நடப்பாண்டு இந்த திட்டத்தின் கீழ், மாநில அரசு சித்ரதுர்கா மாவட்டத்தின், 75,000 ஏக்கர் பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்ய ஆலோசிக்கப்படுகிறது. திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
l துங்கபத்ரா அணையில், மண் சேர்ந்ததால், தண்ணீர் சேகரிப்பு திறன் குறைந்துள்ளது. இதற்கு தீர்வு காண, விவசாயிகள் வேண்டுகோளின்படி, கோப்பாலின் நவலி அருகில் 15,600 கோடி ரூபாய் செலவில், புதிய அணை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் பேச்சு நடத்தப்படுகிறது.
பிருந்தாவன் பூங்கா
l கே.ஆர்.எஸ்., அணையின் பிருந்தாவன் பூங்கா, அரசு, தனியார் ஒருங்கிணைப்பில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக்கப்படும்
l பாவகடா சோலார் பார்க் போன்று, நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான நிலங்களில், அணைகளின் அருகில் 'சோலார் பார்க்' அமைக்கப்படும்.
l ஹேமாவதி திட்டத்தின் கீழ், 5.45 கி,மீ., துார கால்வாய், துமகூரின் ஷாகாவில் 166.90 கி.மீ., துார கால்வாய் தரம் உயர்த்தப்படும்
2.41 லட்சம் ஏக்கர்
l கர்நாடக நீர்ப்பாசன கார்ப்பரேஷன் சார்பில், பல்வேறு பகுதிகளில் 7,280 கோடி ரூபாய் செலவில் நீர்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், 2.41 லட்சம் ஏக்கர் பகுதிகளுக்கு, நீர்ப்பாசன வசதி கிடைக்கும்
l கிருஷ்ணா பாக்யா திட்டம், 3,779 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தால் 2 லட்சம் ஏக்கர் பகுதிகளுக்கு, நீர்ப்பாசன வசதி கிடைக்கும்
l குடிநீருக்காக 970 கோடி ரூபாய் செலவில், கொப்பாலின், எலபுர்கா, குகனுாரின் 38 ஏரிகளை நிரப்பும் திட்டம், நடப்பாண்டு துவக்கப்படும். ராய்ச்சூர், மஸ்கியின், பாமனகல்லுார் பகுதிகளுக்கு, நாராயணபுரா பலதன்டே கால்வாய் மூலமாக, 900 கோடி ரூபாய் செலவில், நீர்ப்பாசன வசதி செய்யப்படும்.
l காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் சார்பில், ஹெப்பகவாடி, நிடகட்டு, துருகனுர், மளவள்ளியின், மாதவமந்த்ரி கால்வாய்கள், மத்துாரின், கெம்மன்னு கால்வாய் தரம் உயர்த்தப்படும்.
ஹூன்சூரின், மரதுார், கனகபுராவின், ஹெக்கனுரில் ஏரி நிரப்பும் திட்டங்கள், ஸ்ரீரங்கா நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும். வருணாவில், கால்வாய் மேம்பாடு, குப்பியில் குடிநீர் திட்டம், ராம்நகரில், அர்க்காவதி ஆறு சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மேற்கூறிய திட்டங்களுக்கு 2,000 கோடி ரூபாய் செலவிடப்படும்
l கலபுரகி நகருக்கு, குடிநீர் வினியோகிக்க, பீமா, காகினா ஆறுகளில் இருந்து, பென்னதொரா அணைக்கு தண்ணீர் பாய்ச்ச, 365 கோடி ரூபாய் செலவிடப்படும்
l தார்வாட் மாவட்டத்தில் பென்னேஹள்ளா ஆற்றால், வெள்ள பாதிப்பு ஏற்படும் கிராமங்களில், தடுப்பு சுவர் கட்ட திட்டம் வகுக்கப்படும்.