புதுடில்லி தொகுதி வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றதில் வழக்கு
புதுடில்லி தொகுதி வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றதில் வழக்கு
ADDED : மார் 26, 2025 08:39 PM
புதுடில்லி:சட்டசபைத் தேர்தலில் புதுடில்லி தொகுதியில் பர்வேஷ் சிங் வர்மா, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பர்வேஷ் வர்மா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் உட்பட 23 பேருக்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
டில்லி சட்டசபைத் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. புதுடில்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ., சார்பில் பர்வேஷ் சிங் வர்மா, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித் மற்றும் இதர கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் சிங் வர்மா வெற்றி பெற்றார். மேலும், பா.ஜ., அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், புதுடில்லி தொகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் அகர்வால் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், “சட்டசபைத் தேர்தலில் புதுடில்லி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய, ஜனவரி 17ம் தேதி, மாலை 3:00 மணிக்கு முன்பே தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. எனவே, புதுடில்லி தொகுதி தேர்தல் முடிவு செல்லாது என அறிவிக்க வேண்டும்,”என, கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜஸ்மீத் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கைக்கு பதில் அளிக்குமாறு, அமைச்சர் பர்வேஷ் சிங் வர்மா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் உட்பட 23 பேர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜஸ்மீத் சிங், விசாரணையை ஏப்.,27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட பர்வேஷ் சிங் வர்மா, 30,088 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், வர்மாவை விட 4,089 ஓட்டுக்கள் குறைவாகப் பெற்றிருந்தார்.