புதுடில்லி ரயில் நிலைய நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
புதுடில்லி ரயில் நிலைய நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
ADDED : பிப் 16, 2025 11:36 PM

புதுடில்லி: புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 18 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 14 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும், பலர், பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராட பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களுக்காக, புதுடில்லி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு ஏராளமான பயணியர் காத்திருந்தனர். ஏற்கனவே அதிகமான பயணியர் காத்திருந்த வேளையில், நேரம் செல்ல செல்ல நடைமேடைகளில் கூட்டம் அதிகரித்தது.
பிரயாக்ராஜ் செல்லும் ரயில் புறப்பட தாமதமானதால், ரயில் நிலைய நடைமேடை 14 மற்றும் 15ல் ஏராளமான பயணியர் காத்திருந்தனர்.
அப்போது, பிரயாக்ராஜ் செல்லும் ரயில், 16வது நடைமேடைக்கு வரவுள்ளதாக செய்தி பரவியது. இது, ஏற்கனவே நீண்ட நேரம் காத்திருந்த பயணியரை திடீரென பீதிக்குள்ளாக்கியது.
அப்போது, மேலும் அதிகமான பயணியர் அந்த இரு நடைமேடைகளை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களில் சிலர், எஸ்கலேட்டர் வழியே செல்ல முயன்ற போது, கீழே தவறி விழுந்தனர். அவர்கள் மீது இருபுறமும் இருந்து வந்த பயணியர் விழுந்ததில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் பலர் மூச்சு திணறி உயிரிழந்தனர். சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு இல்லாததும், விபத்து நேர காரணம் என பலரும் கூறுகின்றனர்.
எனினும், பிரயாக்ராஜ் செல்ல ஏராளமானோர் அந்த ரயில் நிலையத்தில் கூடியது தான், விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், ரயில்கள் புறப்பட தாமதம் ஆனதும், ஒரு மணி நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு, முன்பதிவு அல்லாத டிக்கெட் கொடுக்கப்பட்டதும் தான் நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த நெரிசலில் சிக்கி, 15 பேர் பலியானதாக நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியான தகவலின் படி கூறப்பட்டது.
இந்நிலையில், நெரிசலில் காயமடைந்தவர்களில் மேலும் மூன்று பேர் நேற்று இறந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை, 18 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே, நெரிசல் நிகழ்ந்த ரயில்வே நடைமேடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, நெரிசலுக்கு என்ன காரணம் என, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, 14 மற்றும் 15வது நடைமேடைகளில் குவிந்து கிடந்த செருப்புகள், கிழிந்த ஆடைகள், சிதறிக்கிடந்த உணவு போன்றவற்றை ரயில்வே ஊழியர்கள் இரவு முழுதும் அப்புறப்படுத்தினர்.
புதுடில்லி ரயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 2.5 லட்சம், லேசாக காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என, ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.