எம்.பி.,க்களுக்கு லஞ்சப் பணம் தந்த வழக்கில் திருப்பம்: அமர் சிங் கைது
எம்.பி.,க்களுக்கு லஞ்சப் பணம் தந்த வழக்கில் திருப்பம்: அமர் சிங் கைது
ADDED : செப் 06, 2011 11:45 PM

புதுடில்லி: பார்லிமென்டில் நடந்த மத்திய அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளிக்க, பாரதிய ஜனதா எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமின் வேண்டி இவர் நீதிபதியிடம் கெஞ்சினார். பலிக்கவில்லை; நிராகரிக்கப்பட்டது. இவருடன் பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டதை எதிர்த்து, மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரி கட்சிகள், 2008ல் வாபஸ் பெற்றன. இதைத் தொடர்ந்து, பார்லிமென்டில் 2008 ஜூலை 22ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற, பா.ஜ., எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது.
லஞ்சமாக கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம், நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதம் நடக்கும் போதே, அனைத்து எம்.பி.,க்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. இதை, 'டிவி'யில் ஒளிபரப்பு செய்த போது மக்கள் அதிர்ந்து போயினர். நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக டில்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, டில்லி போலீசார் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங், இவரது உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா, அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி, பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் பகன்சிங் குலாஸ்தி, அசோக் அர்கல் மற்றும் மகாவீர் சிங் பக்கோரா, சுகைல் ஹிந்துஸ்தானி ஆகியோர் மீது, குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தனர்.
ஏற்கனவே அமர் சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனாவும், பா.ஜ., இளைஞர் அணி பிரமுகர் சோகைல் ஹிந்துஸ்தானியும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுதீந்திர குல்கர்னி தற்போது அமெரிக்காவில் உள்ளதால் அவருக்கு இன்னும் சம்மன் அனுப்பப்படவில்லை. எனவே, அவர் நேற்று, கோர்ட்டில் ஆஜராகவில்லை. இரண்டு வாரத்திற்குள் அவர் கோர்ட்டில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.நம்பிக்கை ஓட்டெடுப்பு அன்று, அமர் சிங்கின் உதவியாளர் சக்சேனா, அமர் சிங்கை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதையும், அமர் சிங்கின் காரில் லஞ்சப் பணம் எடுத்துச் செல்லப்பட்டதையும் டில்லி போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, ஊழல் தடுப்பு சட்டத்தில் அமர் சிங் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவருடன் பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்களான பகன்சிங் குலாஸ்தி மற்றும் மகாவீர் சிங் பக்கோரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை இரண்டு வார காலம் சிறையில் வைக்கும் படி, டில்லி சிறப்பு கோர்ட் நீதிபதி சங்கீதா திங்ரா செகால் உத்தரவிட்டார். உடனடியாக மூவரும் ஜாமின் கோரினர்.ஆனால், இவர்களது கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார். இவர்களுக்கு ஜாமின் அளிப்பது குறித்து, டில்லி போலீசார் தங்கள் தரப்பு கருத்தை கோர்ட்டில் பதிவு செய்யும் படி, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமர் சிங், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதியிடம் கெஞ்சல் :
கோர்ட்டில் ஆஜரான ராஜ்யசபா எம்.பி.,யான அமர் சிங் குறிப்பிடுகையில், 'சமீபத்தில் சிங்கப்பூரில் எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதற்கு, 24 மணி நேர மருத்துவ உதவி பெற்று வருகிறேன். சிறையில் அடைக்கப்பட்டால் என் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிறுநீரகங்கள் பாதிப்படையலாம்.'மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து வருகிறேன். கடந்த, 24 மணி நேரத்தில் என் உடல் நிலை மோசமாக உள்ளது. சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அடிக்கடி டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டும். ரத்தபரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஜாமினில் செல்வதால் நான் தப்பி சென்று விடமாட்டேன். சாட்சியங்களை கலைக்க மாட்டேன்' என்றார்.'எல்லா குற்றவாளிகளும் சமமாக தான் கருதப்படுவார்கள்' என, நீதிபதி குறிப்பிட்டார். 'ஆனால், நான் மற்ற குற்றவாளிகளுடன் சமமாக இருக்க முடியாது. ஏனென்றால் என் உடல்நிலை அப்படி உள்ளது' என்றார் அமர்சிங்.
மருத்துவமனை தொடர்பான ஆவணங்களையும் நீதிபதியிடம் அமர்சிங் ஒப்படைத்தார். '2010, அக்டோபருக்கு முந்தைய மருத்துவ ஆவணங்கள் தான் உள்ளன. தற்போதுள்ள மருத்துவ ஆவணங்கள் ஏதும் ஒப்படைக்கப்படவில்லை' என, நீதிபதி குறிப்பிட்டார். 'போதுமான கால அவகாசம் இல்லாததால், சமீபத்திய மருத்துவ ஆவணங்களை பெற முடியவில்லை' என, அமர்சிங் கூறினார்.'கோர்ட் மீதுள்ள மரியாதையின் காரணமாக தான் அமர்சிங் நேரில் ஆஜராகியுள்ளார். ஓரிரு நாட்களில் நீங்கள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்கிறோம். எனவே, அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டும்' என அமர் சிங் வழக்கறிஞரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்திர சரண் கோரினார். உடனடியாக ஆவணங்களை தாக்கல் செய்ய வற்புறுத்திய நீதிபதி, இடைக்கால ஜாமின் அளிக்க முடியாது. பொது ஜாமினுக்கு விண்ணப்பிக்கும் படி கூறினார். இதையடுத்து நாளை, அமர்சிங் மீண்டும் ஜாமின் கோரி விண்ணப்பிக்க உள்ளார்.
ஓட்டுக்கு பணம்: கட்சிகள் கருத்து என்ன?பார்லிமென்டில், 2008ல் நடந்த, மத்திய அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் , எம்.பி.,க்களுக்கு ஓட்டுப்போட பணம் கொடுத்த வழக்கில், நீண்ட இழுபறிக்கு பின் இப்போது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகள் இங்கே:
'இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறார்' :
அமர் சிங் கைது குறித்து, இ.கம்யூ., எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தா குறிப்பிடுகையில், 'நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம் கொடுத்தது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான செயல். ஆனால், இந்த விஷயத்தில் சமாஜ்வாடி கட்சியில் இருந்த அமர்சிங் செயல்பட்டுள்ளார். இவர் தனக்காக செயல்பட்டிருக்க முடியாது. யாருக்காக இவர் செயல்பட்டார் என்பதை, பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்த வேண்டும். 'இசட்'பிரிவு பாதுகாப்பை கொண்ட அமர் சிங் தற்போது சிறைக்கு சென்றுள்ளார். அவர் இருக்க வேண்டிய இடத்தில் தான் தற்போது உள்ளார். இவ்வளவு காலம் அரசு இவரை பாதுகாத்து வந்துள்ளது' என்றார்.
பலிகடா அமர்சிங் -சமாஜ்வாடி கருத்து:'சுப்ரீம் கோர்ட் உத்தரவின் காரணமாக, டில்லி போலீசார் இந்த வழக்குக்கு வெள்ளையடித்துள்ளனர். இந்த வழக்கில் அமர்சிங் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை பார்லிமென்டில் எழுப்புவோம்' என, சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
பணம் எங்கிருந்து வந்தது -பா.ஜ., கேள்வி:
பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிடுகையில், 'நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம் கொடுத்த விஷயத்தை வெளிப்படுத்திய முன்னாள் எம்.பி.,க்களை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அமர் சிங்கை கைது செய்துள்ளது வேண்டுமானால் சரியான நடவடிக்கையாக இருக்கலாம். நம்பிக்கை ஓட்டெடுப்பில் பலன் அடைந்தது காங்கிரஸ் தான். அந்த கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டு விட்டு கெட்ட நோக்குடன் பா.ஜ.,எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்னும் ஆழமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட் தலையிட்டிருக்காவிட்டால் அமர் சிங் கைதாகியிருக்க மாட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமர் சிங் இல்லை. அப்படியிருக்கும் போது பணம் எங்கிருந்து வந்தது? யார் தூண்டுதலின் பேரில் அமர்சிங் இந்த காரியத்தில் ஈடுபட்டார் என்பது விசாரணையில் பெரிய கேள்வி குறியாக உள்ளது' என்றார்
பா.ஜ.,வின் மற்றொரு தலைவரான ஷாநவாஸ் ஹூசைன் குறிப்பிடுகையில், 'இந்த லஞ்ச வழக்கில் அமர் சிங் நடுவராக தான் செயல்பட்டுள்ளார். ஆனால், பலன் அடைந்த காங்கிரஸ் மீது டில்லி போலீசார் எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் குற்றவாளிகளை அரசு இன்னும் பாதுகாத்து கொண்டிருக்கிறது' என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள அசோக் அர்கல் குறிப்பிடுகையில், ' நாங்கள் லஞ்சம் வாங்குவதாக இருந்தால் எதற்காக, 'டிவி' கேமரா முன்பாக பணத்தை கொட்டினோம். உண்மையான குற்றவாளிகளை பற்றி ஊடகங்கள் ஏன் செய்தி வெளியிட தயங்குகின்றன?' என்றார்.
பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவரான ராஜிவ் பிரதாப் ரூடி குறிப்பிடுகையில், 'லஞ்சம் கொடுக்கப்பட்டதால் பயனடைந்தவர்கள் மீது இன்னும் ஏன் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை? உண்மையை சொல்ல அமர் சிங்குக்கு தற்போது சரியான தருணம் கிடைத்துள்ளது. எந்த நிர்பந்தத்தின் பேரில் அவர் இந்த செயலை செய்தார் என்பதை விளக்க வேண்டும்' என்றார்.
சோம்நாத்: லோக்சபா சபாநாயகராக சோம்நாத் சட்டர்ஜி இருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்தது.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், 'லோக்சபாவில் லஞ்சம் கொடுக்கும் சம்பவம் நடந்தது முறைகேடானது; கண்டிக்கத்தக்கது. லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பா.ஜ., எம்.பி.,க்கள் என்னை நேரில் சந்தித்து தெரிவித்திருக்கலாம். அவர்கள் அப்படி தெரிவிக்காததால் தான் போலீசாரிடம் இந்த விஷயத்தை ஒப்படைக்க வேண்டியதாயிற்று. எனினும் சட்டம் அதன் கடமையை செய்யும். விசாரணை தாமதமாகியது அதன் காரணமாக போலீசார் நடவடிக்கையும் தாமதமாகியுள்ளது' என்றார்.
அமர்சிங்கிற்கு திகாரில் தனி அறை : திகார் சிறையின், மூன்றாம் எண் கொண்ட தனி அறையில், அமர்சிங் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து, தற்போது திகார் சிறையில் ஐந்து எம்.பி.,க்கள் உள்ளனர்.நேற்று கைது செய்யப்பட்ட அமர்சிங், திகார் சிறையில் மூன்றாம் எண் கொண்ட அறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த அறையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா அடைக்கப்பட்டிருந்தார். இந்த சிறையில், 'டிவி' வசதி உள்ளது. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த அறையில், அமர்சிங் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, நேற்று மாலை அடைக்கப்பட்டார்.ஏற்கனவே, திகார் சிறையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான ராஜா, கனிமொழி, காமன்வெல்த் ஊழல் வழக்கில் கைதான சுரேஷ் கல்மாடி, வருவாய்க்கு அதிகமாக சொத்துச் சேர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.