சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிய வரவு ஏ.ஐ., வழக்கறிஞர்: தலைமை நீதிபதி ஆச்சர்யம்
சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிய வரவு ஏ.ஐ., வழக்கறிஞர்: தலைமை நீதிபதி ஆச்சர்யம்
UPDATED : நவ 07, 2024 10:10 PM
ADDED : நவ 07, 2024 10:03 PM

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகத்தில் ஏ.ஐ., வழக்கறிஞர் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட் ஏ.ஐ.,யின் அறிவுத்திறனை பரிசோதிக்கும் வகையில் அதனுடன் கலந்துரையாடினார்.
அப்போது, ''இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா?'' என சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் உடையுடன் கண்ணாடியுடன் காணப்பட்ட அந்த செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர் அளித்த பதில்: ஆம், இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. ஆனால், இது சுப்ரீம் கோர்ட்டால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு மட்டுமே அத்தகைய தண்டனை வழங்கப்படுகிறது எனக்கூறி தலைமை நீதிபதியை ஆச்சர்யப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் சந்திரசூட் உடன், புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள சஞ்சீவ் கண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சந்திரசூட் பேசியதாவது: இந்த புதிய அருங்காட்சியகம் சுப்ரீம் கோர்ட்டின் சிறப்புகளையும், தேசத்திற்கான அதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த அருங்காட்சியகம் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் இடமாக மாற வேண்டும். இந்த அருங்காட்சியகம் நீதிபதிகள் பற்றியது மட்டும் அல்ல. அரசியலமைப்பு குறித்தும், அதனை உருவாக்கியவர்கள் குறித்தும், நீதிமன்றம் இந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்த பார் கவுன்சில் உறுப்பினர்கள் குறித்தும் பல விஷயங்கள் இங்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.