அடுக்குமாடி பராமரிப்பு கட்டணம் வரி விதிப்பு குறித்து புதிய விளக்கம்
அடுக்குமாடி பராமரிப்பு கட்டணம் வரி விதிப்பு குறித்து புதிய விளக்கம்
ADDED : ஏப் 17, 2025 12:01 AM

புதுடில்லி:அடுக்குமாடி குடியிருப்புகளில், மாதாந்திர பராமரிப்புக் கட்டணம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயை எட்டினால், ஜி.எஸ்.டி., பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மறைமுக மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியமான சி.பி.ஐ.சி., தெரிவித்துள்ள தாவது:
அடுக்குமாடி குடியிருப்புகளில், மாதாந்திர பராமரிப்பு கட்டணமாக, ஓர் உறுப்பினருக்கு 7,500 ரூபாய்க்கு மேல் வாங்கினாலோ; ஆண்டு மொத்த தொகை 20 லட்சத்தை எட்டினாலோ, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
இதன்படி, ஓர் உறுப்பினருக்கு 9,000 ரூபாய் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வசூலித்தால், 7,500 ரூபாய்க்கு மேல் உள்ள 1,500 ரூபாய்க்கு அல்லாமல், 9,000 ரூபாய்க்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் மாதாந்திர பராமரிப்புக் கட்டணம் தொடர்பான இந்த ஜி.எஸ்.டி., புதிது அல்ல, 2019 முதல் நடைமுறையில் இருப்பதுதான். 7,500 ரூபாய்க்கு மேல் உள்ள தொகைக்கு மட்டும் வரி பொருந்துமா, மொத்த தொகையிலும் கணக்கிடப்படுமா என்ற குழப்பம் சிலருக்கு எழுந்ததால், இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஆண்டு மொத்தக் கட்டண வசூல் 20 லட்சம் ரூபாய் அல்லது மாதாந்திர கட்டணம் 7,500 ரூபாய்க்கு மேல் என்ற இரண்டுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி., பொருந்தும். இந்த நிபந்தனையில் வராத மற்ற அடுக்குமாடி குடியிருப்பு உறுப்பினர்களுக்கு ஜி.எஸ்.டி., வராது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.