பெலகாவியில் புதிய முகம்... சிக்கோடியில் பழைய முகம்!
பெலகாவியில் புதிய முகம்... சிக்கோடியில் பழைய முகம்!
ADDED : பிப் 13, 2024 06:51 AM

லோக்சபா தேர்தலில், பெலகாவியில் புதிய முகம், சிக்கோடியில் பழைய முகம், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது.
கர்நாடகாவின் பிரபலமான மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. இங்கு பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு சமமான செல்வாக்கு உள்ளது.
இந்த தொகுதியை இரண்டு கட்சிகளும், கவுரவ பிரச்னையாக கருதுகின்றன. பெலகாவி மாவட்டத்தின் இரண்டு லோக்சபா தொகுதிகளும் பா.ஜ., வசம் உள்ளன. கடந்த முறை தேர்தலில், பெலகாவியில் சுரேஷ் அங்கடியும், சிக்கோடியில் அன்னா சாஹேப் ஜொல்லேவும் வெற்றி பெற்றிருந்தனர்.
சுறுசுறுப்பு மந்தம்
சுரேஷ் அங்கடி காலமானதால் நடந்த இடைத்தேர்தலில், அவரது மனைவி மங்களாவை களமிறக்கி, பா.ஜ., வெற்றி பெற வைத்தது. வெற்றி பெற்ற பின், அவர் தொகுதியில் தலை காண்பிக்கவில்லை.
பணிகளிலும் சுறுசுறுப்பு இல்லை. 'இம்முறை இவருக்கு சீட் கொடுக்க கூடாது; திறமையான மாற்று வேட்பாளரை களமிறக்க வேண்டும்' என, மாவட்ட தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போது, ஆளுங்கட்சியான காங்கிரஸ், இரண்டு தொகுதிகளையும் தன் வசமாக்க வேண்டும் என உறுதி பூண்டுள்ளது. வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை தேடுகிறது.
லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் மேலிடம் 28 தொகுதிகளுக்கும், பார்வையாளர்களை நியமித்துள்ளது. பெலகாவிக்கு, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைவர்களுடன் பேச்சு
இவர் தொகுதி முழுதும் ஆய்வு செய்து, டாக்டர் கிரிஷ் சோனவால்கர், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள் பெயரை, மேலிடத்துக்கு அனுப்பிஉள்ளார்.
டாக்டர் கிரிஷ், ஜார்கிஹோளி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர். லட்சுமி ஹெப்பால்கர், தன் மகன் மிருணாளுக்கு சீட் கேட்கிறார். ஏற்கனவே முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
பெலகாவியில் சதீஷ் ஜார்கிஹோளியை களமிறக்க, காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. இதை விரும்பாத அவர், தன் மகளுக்கு சீட் கேட்டதாக தகவல் வெளியானது. இப்போது தனக்கு நெருக்கமான கிரிஷ் பெயருடன், மிருணாளின் பெயரையும் சிபாரிசு செய்துள்ளார்.
கிரிஷின் தந்தை கிருஷ்ணப்பா, 1994ல் விவசாய சங்கம் சார்பில், அரபாவி தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர். கிரிஷ் பெலகாவியில் உள்ள, 'லெக்வீவ் ஷ்பெஷாலிட்டி மருத்துவமனை' இயக்குனர்.
பெலகாவி மாவட்டத்தில், லிங்காயத், குருபர், சிறுபான்மையினர், தலித், சிறுபான்மையின வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவருக்கு சீட் கொடுத்தால், அனைத்து சமுதாயங்களும் ஆதரிக்கும் என்பது, காங்கிரஸ் தலைவர்களின் எண்ணமாகும்.
எம்.எல்.சி.,
சிக்கோடி தொகுதியில், எம்.எல்.சி., பிரகாஷ் ஹுக்கேரி, சிக்கோடி மாவட்ட காங்., தலைவர் லட்சுமண் ராவ் சிங்களே பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பிரகாஷ் ஹுக்கேரி, பா.ஜ., வேட்பாளர் அன்னா சாஹேப் ஜொல்லேவிடம் தோற்றார். அதன்பின் சட்ட மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இம்முறையும் பிரகாஷ் ஹுக்கேரியை களமிங்கும்படி, கட்சி நெருக்கடி கொடுக்கிறது.
இதனால் வெறுப்படைந்த அவர், 'ஒவ்வொரு முறையும் உதை வாங்க, நான் கால் பந்து அல்ல. கட்சி மேலிடம் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், லோக்பா தேர்தலில் நான் போட்டியிட முடியாது' என கறாராக கூறி உள்ளார்.
இவரது மனதை கரைக்க, கட்சி மேலிடம் முயற்சிக்கிறது. ஒருவேளை இவர் தலையாட்டினால், பெலகாவியில் புதிய முகம், சிக்கோடியில் பழைய முகம் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது
.- நமது நிருபர் -