'பாஸ்டேக்' புதிய விதிகள்: இன்று முதல் அமல்; முழு விபரம் இதோ!
'பாஸ்டேக்' புதிய விதிகள்: இன்று முதல் அமல்; முழு விபரம் இதோ!
ADDED : பிப் 17, 2025 12:18 PM

சென்னை: நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான 'பாஸ்டேக்' நடைமுறையில் புதிய விதிகள் இன்று (பிப்.,17) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச் சாவடிகளில் காத்திருப்பை தவிர்த்து, நெரிசலை குறைப்பதற்காக பாஸ்டேக் திட்டம் அறிமுகமானது. இதன்படி மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக வங்கிகள், மொபைல் போன் நிறுவனங்கள் வழங்கியுள்ள மின்னணு அட்டைகள், வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது, அங்குள்ள மின்னணு கருவிகள் வாயிலாக, சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பு நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில் பாஸ்டேக் கட்டணம் வசூலிப்பதற்கு என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா புதிய விதிகளை வகுத்துள்ளது. இதனை இன்று முதல் நடைமுறைப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு என்பிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
* அதன்படி, கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரியை பாஸ்டேக் வங்கி கணக்குகளில், முறையாக பதிவு செய்யாத வாகனங்கள் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
* இதேபோல சேஸ் எண், பதிவு எண்களுக்கு இடையே ஆர்.டி.ஓ. ஆவணங்களில் ஒற்றுமை இல்லாத வாகனங்களும் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
* இவ்வாறு பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட வாகனங்களுக்கு இன்று முதல் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
* மேலும் பாஸ்டேக் வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லாத பட்சத்தில், ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே அதனை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
* சுங்கச்சாவடியை கடந்த 10 நிமிடத்துக்குள் கட்டணம் அதில் இருந்து கழித்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு ரீசார்ஜ் செய்யப்படாத வாகனங்களும் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு இரு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது.
* தற்போது பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய மறந்தாலோ, இருப்பு இல்லாவிட்டாலோ, சுங்கச் சாவடியிலேயே ரீசார்ஜ் செய்யலாம்.
* வாகன ஓட்டிகள் பயணம் செய்யும் முன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருப்பதையும், போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம் ஆகும்.