லடாக், கோவா, ஹரியானாவுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
லடாக், கோவா, ஹரியானாவுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
ADDED : ஜூலை 15, 2025 06:52 AM

கோவா, ஹரியானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கோவா கவர்னராக இருக்கும் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளைக்கு பதில், புதிய கவர்னராக, ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அசோக் கஜபதி ராஜு, 74, நியமிக்கப்படுகிறார்.
ஹரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு மாற்றாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் ஆஷிம் குமார் கோஷ் நியமிக்கப்படுகிறார்.
லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னராக இருந்த பி.டி.மிஸ்ராவின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, புதிய கவர்னராக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் கவிந்தர் குப்தா, 65, நியமிக்கப்படுகிறார். மூன்று பேரும் பதவியேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான 3.0 ஆட்சி தொடர, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தின் ஆதரவு மிக முக்கியம். அக்கட்சிக்கு லோக்சபாவில் 16 எம்.பி.,க்கள் உள்ளனர். தே.ஜ., கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக இருப்பதால், ஒரு கேபினட் அமைச்சர், இரண்டு இணை அமைச்சர்கள் பதவி, தெலுங்கு தேசத்துக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த, தெலுங்கு தேசம் மூத்த தலைவர் அசோக் கஜபதி ராஜு, கோவா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2014 - 19 வரை, பிரதமர் மோடி அமைச்சரவையில் விமான போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -