ADDED : டிச 25, 2024 12:59 AM

புதுடில்லி, ஐந்து மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரான, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், சொந்த காரணங்களுக்காக தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அதை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ஒடிசா கவர்னராக, மிசோரம் கவர்னர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டி நியமிக்கப்பட்டு உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் கவர்னராகவும்; பீஹார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள கவர்னராகவும்; கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பீஹார் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கவர்னர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த, ஏப்., - மே மாதங்களில் லோக்சபாவுக்கு நடந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.
இதைத் தொடர்ந்து கவர்னர்கள் மாற்றப்படுவர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான மூன்றாவது ஆட்சியில் தற்போது கவர்னர்கள் மாற்றம் நடந்துள்ளது.
முன்னாள் ராணுவத் தளபதியான, வி.கே. சிங் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அஜய் குமார் பல்லாவுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களாக மற்ற கவர்னர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஓராண்டுக்கு மேலாக கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலராக இருந்த அஜய் குமார் பல்லா, அந்த மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.