ரூ.122 கோடி மோசடி: நியூ இந்தியா கூட்டுறவு வங்கி முன்னாள் அதிகாரி மீது விசாரணை
ரூ.122 கோடி மோசடி: நியூ இந்தியா கூட்டுறவு வங்கி முன்னாள் அதிகாரி மீது விசாரணை
ADDED : பிப் 15, 2025 03:30 PM

மும்பை:நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பொதுமேலாளர் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நியூ இந்தியா கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நடந்த முறைகேடு காரணமாக, வங்கியின் செயல்பாட்டில் ரிசர்வ் வங்கி பல தடைகளை விதித்துள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு எந்தக்கடனையும் வழங்கவோ அல்லது வைப்புத்தொகையை ஏற்கவோ ஆறு மாதங்களுக்கு முடியாது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூட்டுறவு வங்கியின் தலைமை கணக்கு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த முறைகேடானது 2020 முதல் 2025க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது. வங்கியின் பொதுமேலாளர் ஆக இருந்த ஹிதேஷ் பிரவின்சந்த், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திவங்கிக்கணக்கில் இருந்து ரூ.122 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ர் பி.என்.எஸ் பிரிவுகள் 316 (5) மற்றும் 61 (2) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஹிதேஷ் தவிர வேறு சிலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

