டில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு
டில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 24, 2025 10:07 PM

புதுடில்லி:டில்லி உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக வினோத்குமார், ஷாயில் ஜெயின் மற்றும் மது ஜெயின் ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி தேவேந்திரகுமார் உபாத்யாயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 21ம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம், நீதிபதிகள் காமேஸ்வர் ராவ், நிதின் வசுதேவ் சாம்பிர், விவேக் சவுத்ரி, அனில் கேத்ரபால், அருண் குமார் மொங்கா மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோரை, புதிய நீதிபதிகளாக அறிவித்தது.
அதன் பின், கடந்த 1ம் தேதி, ஷாயில் ஜெயின் மற்றும் மது ஜெயினை, உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டனர். மறுநாள், வினோத்குமார் அறிவிக்கப்பட்டார்.
புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா, டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி தேவேந்திரகுமார் உபாத்யாயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகள் மூவரும், ஹிந்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையான 60ல், 43 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்; இன்னமும், 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
புதிய நீதிபதிகள் மூவரும், 1992ம் ஆண்டு நீதித்துறையில் சேர்ந்தனர். மாவட்ட முதன்மை நீதிபதிகள், செஷன்ஸ் நீதிபதிகள் என பல பொறுப்புகளை வகித்த இவர்கள் தற்போது, உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.