ADDED : ஜூன் 14, 2025 09:10 PM
புதுடில்லி:புதிய மதுபானக் கொள்கைகள் அமல்படுத்த டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் கலால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு மாநிலங்களின் மதுபானக் கொள்கைகளை ஆய்வு செய்ய, தலைமைச் செயலர் தர்மேந்திர குமார் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இம்மாதம் 30ம் தேதிக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழு தயாரிக்கும் புதிய மதுபானக் கொள்கையை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்த பின் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு தரமான மதுபானம் வழங்குவதும், மதுபான விற்பனை மற்றும் வினியோக முறையை வெளிப்படையானதாகவும், நவீனமாகவும், பொறுப்புணர்வுடனும் மாற்றுவதே அரசின் நோக்கம்.
மதுவின் தரம் அறிவியல் பூர்வமாக சோதிக்கப்படும். விற்பனை முறை டிஜிட்டல்மயம் ஆக்கப்படும். சட்டவிரோத விற்பனையைத் தடுத்தல் மற்றும் உரிமம் வழங்கும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுதல் இந்தக் கொள்கையில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.