பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: இந்தியாவிலிருந்து 90 நாடுகளுக்கு ஏற்றுமதி
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: இந்தியாவிலிருந்து 90 நாடுகளுக்கு ஏற்றுமதி
ADDED : செப் 25, 2024 05:06 PM

புதுடில்லி: '' 2023 - 24ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடி ஆக அதிகரித்துள்ளது. 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.' மேக் இன் இந்தியா' திட்டம் துவக்கப்பட்ட 10வது ஆண்டில் இச்சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து துறைகளிலும் இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. உலகளவில் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா எழுச்சி பெற்றுள்ளது. இன்று இந்திய ஆயுதப்படைகள் நம் மண்ணில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும், தளவாடங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். 90 நாடுகளுக்கு பாதுகாப்பு கருவிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.2023 -24 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1.27 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஏற்றுமதி
ராணுவத்தை தயார்படுத்தும் நோக்கத்தில், சமீப நாட்களாக உள்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. இந்த ஆண்டில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 21 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இதனை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.