சொத்து குவிப்பு வழக்கில் சிவகுமாருக்கு புது சிக்கல்
சொத்து குவிப்பு வழக்கில் சிவகுமாருக்கு புது சிக்கல்
ADDED : அக் 22, 2024 12:45 AM

சொத்து குவிப்பு வழக்கில், துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிரான சி.பி.ஐ., விசாரணையை மாநில அரசு திரும்ப பெற்றதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல் முறையீடு மனு தாக்கல் செய்து உள்ளது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது, பா.ஜ., ஆட்சியில், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ., ஆட்சியில் சிவகுமாரிடம் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மற்றும் சி.பி.ஐ., மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று தீர்ப்பு கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் அரசின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., நேற்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், ''இந்த நாடு முழுதும் சி.பி.ஐ., விசாரிக்கும் ஒரே அரசியல்வாதி நான் தான். அவர்கள் என்னை மிகவும் நேசிக்கின்றனர். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவும், திரும்பப் பெறவும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.
-- நமது நிருபர் ----