எடியூரப்பாவுக்கு புதிய சிக்கல்; வழக்குப்பதிவு செய்ய விசாரணை ஆணையம் பரிந்துரை
எடியூரப்பாவுக்கு புதிய சிக்கல்; வழக்குப்பதிவு செய்ய விசாரணை ஆணையம் பரிந்துரை
UPDATED : நவ 09, 2024 05:18 PM
ADDED : நவ 09, 2024 05:09 PM

பெங்களூரூ: கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு புகாரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிய போது, கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா, சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்தார். இதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், உள்ளூரில் விற்கப்படும் தொகையை விட கூடுதல் தொகை கொடுத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
இது தொடர்பாக நீதிபதி டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்துள்ளது.
அதனடிப்படையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நிறுவனமான டி.எச்.பி., குளோபல் அன்ட் பாராமெடிக்கல்ஸ் நிறுவனத்திடம் அதிக தொகை கொடுத்து மருத்துவ உபகரணங்களை வாங்கியுள்ளதாகவும், உள்ளூர் நிறுவனங்கள் ரூ.330க்கு விற்ற பி.பி.இ., கிட்டுகள், நாளடைவில் ரூ725க்கு விற்பனை செய்து வந்த நிலையில், டி.எச்.பி., குளோபல் நிறுவனத்திடம் இருந்து ரூ.2,117க்கு வாங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன்மூலம், 150 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
'கொரோனா மருத்துவ உபகரணங்கள் முறைகேடு என தொடரப்படும் வழக்கு தொடர்பாக எனக்கு எந்த கவலையும் இல்லை. கொரோனா சமயத்தில் சட்டத்திற்குட்பட்டே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கில் என் மீது வழக்குப்போட முயற்சிகள் நடக்கின்றன. உறுதியாக சொல்வேன், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. விசாரணையில் உண்மை வெளிப்படும்,' என்றார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், 'மூத்த நீதிபதி குன்ஹாவின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. எந்த அரசியல் பழிவாங்கும் நோக்கமும் இல்லை,' எனக் கூறினார்.