கர்நாடக அ.தி.மு.க.,வுக்கு விரைவில் புதிய செயலர்? ஆட்சி மன்ற குழுவை கூட்ட இ.பி.எஸ்., திட்டம்
கர்நாடக அ.தி.மு.க.,வுக்கு விரைவில் புதிய செயலர்? ஆட்சி மன்ற குழுவை கூட்ட இ.பி.எஸ்., திட்டம்
ADDED : அக் 12, 2024 07:12 AM

பெங்களூரு, : கர்நாடக மாநில அ.தி.மு.க.,வுக்கு புதிய மாநில செயலரை நியமிப்படுவது குறித்து, கூடிய விரைவில் கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநில அ.தி.மு.க., வளர்ச்சிக்கு ஆரம்ப காலம் முதல் அயராது பாடுபட்ட, சில முன்னாள் நிர்வாகிகள் வருத்தத்தில் இருந்தனர். கடந்த வாரம் பொதுச் செயலர் பழனிசாமியை சேலத்தில் சந்தித்து, அவர்கள் பேசினர். கர்நாடகாவில் கட்சிக்கு ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
செல்லாகாசு
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற கர்நாடக மாநில முன்னாள் இணை செயலர் எஸ்.எம்.பழனி விடுத்துள்ள அறிக்கை:
கர்நாடகாவில் அ.தி.மு.க., ஆரம்பம் ஆகும் முன்பே, தெரு, தெருவாக எம்.ஜி.ஆர்., மன்றங்களை உருவாக்கி, அவரது புகழை பரப்பினோம்.
கடந்த 1972ல் கர்நாடகாவில் அ.தி.முக., உருவானபோது, எம்.ஜி.ஆர்., ரசிகர்களாக இருந்தவர்கள், கட்சியில் இணைந்து உழைத்து கட்சியை பட்டி, தொட்டி எங்கும் பரப்பினோம்.
இதன் விளைவாக தங்கவயல், பெங்களூரு காந்திநகரில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர்.
தங்கவயலில் நகராட்சியிலும், பெங்களூரு மாநகராட்சியிலும் அ.தி.மு.க.,வுக்கு கவுன்சிலர்கள் இருந்தனர். கர்நாடகாவில் உள்ள மாநில கட்சிகள், அ.தி.மு.க.,வை அண்ணாந்து பார்த்தன.
அதன் பின், நிர்வாக திறமையின்மை, கட்சி தாவுதல் உட்பட பல காரணங்களால் கட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டு உள்ளது.
தலைநிமிர்ந்து...
கட்சியின் மாநில செயலர்களாக பதவி வகித்த சம்பங்கி ராமய்யா, எம்.சுந்தரம், பி.முனியப்பா, கே.ஆர்.கிருஷ்ணராஜ், புகழேந்தி, எம்.பி.யுவராஜ், எஸ்.டி.குமார் ஆகியோரின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலராக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோது, கர்நாடகாவில் கட்சி எப்படி சிறப்புடன் செயல்பட்டதோ, அதுபோல, நீங்கள் இப்போதும், கட்சி தலைநிமிர்ந்து செயல்பட வேண்டும்.
கட்சிக்கு துரோகம் செய்து, தாவுவோர்போல இல்லாமல், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஒருவரை, மாநில செயலராக நியமிக்க வேண்டும் என, இ.பி.எஸ்.,ஸை கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
கோரிக்கையை கேட்ட எடப்பாடி பழனிசாமி, விரைவில் புதிய மாநில செயலரை நியமிப்பது குறித்து, ஆட்சிமன்றக் குழுவை கூட்டி, விரைவில் முடிவு எடுப்பதாக, உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.