ராணுவத்தில் சேர்க்கப்படும் புதிய ரக ஏவுகணைகள்; டிஆர்டிஓ தலைவர் தகவல்
ராணுவத்தில் சேர்க்கப்படும் புதிய ரக ஏவுகணைகள்; டிஆர்டிஓ தலைவர் தகவல்
ADDED : டிச 15, 2025 07:09 PM

புதுடில்லி: ''கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, தரை வழியே தாக்குதல் நடத்தும் குரூஸ் ஏவுகணை, வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை உள்ளிட்டவை அடுத்த 2 - 3 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது'' என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி காமத் பேசியதாவது: நாடு தன்னிறைவு பெற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 2047 ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயித்துள்ளார். பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமைப்பதவிக்கு வர வேண்டும் என சவால் விடுத்துள்ளார். இதுதான் நாட்டின் முன் இருக்கும் இலக்குகள். இவற்றில் நாங்கள் முன்னேறி செல்கிறோம்.
இன்று ஏவுகணை அமைப்புகள், கவச வாகனங்கள், ராணுவ அமைப்புகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், மற்றும் வெடிமருந்துகள் இலகு ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்ள், ரேடார்கள் உள்ளிட்டற்றில் கணிசமான அளவு இந்தியா சுயசார்பை கொண்டுள்ளது.
நீண்ட தூரம் சென்று தாக்கும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை,தரை வழியே தாக்குதல் நடத்தும் குரூஸ் ஏவுகணை, வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகனை, மனிதனால் எடுத்து செல்லக்கூடிய டாங்கு எதிர்ப்பு ஏவுகணை, இலகுரக டாங்குகள், நீருக்கடியில் இயங்கும் வாகனம் உள்ளிட்டவை அடுத்த 2 - 3 ஆண்டுகளில் இந்திய ஆயுதப்படைகளால் சேர்க்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2029ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும், பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தக்க வைத்துக் கொண்டால், ஏற்றுமதி குறித்து மிகவும் தீவிரமாக பார்க்க வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் இந்தியா தனது பாதுகாப்பு பட்ஜெட்டில் 5.5 சதவீதம் செலவு செய்கிறது. ஆனால், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 10 முதல் 15 சதவீதம் செலவு செய்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

