புதிதாக 52 இந்திரா உணவகங்கள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
புதிதாக 52 இந்திரா உணவகங்கள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : டிச 31, 2024 05:36 AM

பெங்களூரு: பெங்களூரில் ஒவ்வொரு வார்டிலும், இந்திரா உணவகம் திறக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வரும் ஏப்ரலில் 52 உணவகங்கள் துவக்கப்படும் வாய்ப்புள்ளது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மக்களுக்கு குறைந்த விலையில், தரமான உணவு கிடைக்க வேண்டும். உணவில்லாமல் யாரும் பட்டினி கிடைக்க கூடாது என்ற நோக்கில், பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், இந்திரா உணவகங்கள் திறக்கப்படும் என, முதல்வர் சித்தராமையா, பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, புதிய உணவகங்கள் திறக்கவும், புதிய உணவு மெனுவை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
புதிதாக 52 உணவகங்கள் கட்ட, டெண்டர் அழைத்துள்ளோம். டெண்டர் பெறும் ஒப்பந்ததாரர்கள், 12 மாதங்களில் கட்டடத்தை கட்டி முடித்து, மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்திரா உணவகங்களில், உணவு விற்பதில் முறைகேடு நடப்பதை தவிர்க்க, உணவு வகை படங்களுடன் பில் கொடுக்கும் வசதி செய்யப்படும்.
இதனால் எவ்வளவு உணவு விற்கப்பட்டது என்ற கணக்கு கிடைக்கும். உணவு தரத்தை கண்காணிக்க, முறைகேடுகள் நடக்காமல் பார்த்து கொள்ள, மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திரா உணவகங்களில் கேழ்வரகு களி, சப்பாத்தி, சாம்பார், இட்லி, மங்களூரு பன், பிசிபேளா பாத், புலாவ், பிரட், ஜாம், ரவா கிச்சடி வழங்க வேண்டும் என, 2023லேயே அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் செயல்படுத்த முடியவில்லை. 19 சமையல் அறைகளில் இருந்து, புதிய மெனுவின்படி உணவு தயாரிப்பது கஷ்டம். எனவே, சமையல் அறைகளை புதுப்பிக்க வேண்டும். அதன்பின் புதிய மெனுவின் படி உணவுகள் வழங்கப்படும்.
அடுத்த மூன்று மாதங்களில் பெங்களூரு தெற்கு, பொம்மனஹள்ளி, தாசரஹள்ளி, சி.வி.ராமன் நகர், சிவாஜி நகர், சாந்திநகர், சர்வக்ஞநகர், சிக்பேட் உட்பட பல்வேறு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், 52 இந்திரா உணவகங்கள் செயல்பட, இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.