ADDED : டிச 06, 2016 08:58 AM

* 1964-ம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் 'சிறப்புத் தேர்ச்சி' பெற்றவர், இப்போதைய தமிழக முதல்வர். மேற்படிப்பு தொடர மத்திய அரசிடம் இருந்து உதவித் தொகை கிடைத்தது. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல், ஜெயலலிதாவை அரவணைத்துக் கொண்டது சினிமா உலகம்.
* காலை டிபனில் தேங் காய்ப் பால் - இடியாப்பம் தான் எப்போதும் பிடித்த கூட்டணி.
* வீட்டின் போர்டிகோ வாசலுக்கு எதிரே சுவரில் அழகிய விநாயகர் படம் ஒன்று செதுக்கப்பட்டு இருக்கும். காரில் வெளியில் கிளம்பும்போதும், திரும்பி வரும்போதும் அந்த விநாயகர் தரிசனம் தவறாது.
* சிகரெட் புகை ஆகவே ஆகாது. போயஸ் கார்டன் இல்லம் கட்டப்பட்ட காலத்தில் இருந்தே அந்த வளாகத் துக்குள் சிகரெட் புகைத் தடம் இருந்தது இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தையின்போது, மிக மூத்த அரசியல்வாதிகள் இருவர் டென்ஷன் தணிக்க போர்டிகோ
அருகில் புகை பிடிக்கத் தொடங்கினர். அதைப் பார்த்ததும் பதறியபடியே வந்த கார்டன் ஊழியர்கள், 'அம்மாவுக்குப் பிடிக்காது. இங்கே வேண்டாம்!' என்று தடுத்துவிட்டார்கள்.
* 'நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழில் இடம் பெற வேண்டிய முக்கியமான அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகள் ஜெயலலிதாவின் அனுமதிக்குப் பிறகே அச்சுக்குப் போகும்.
* துண்டுச் சீட்டில் அனுப்பப்படும் குறிப்புகளைப் படித்த பிறகு, அது தேவை இல்லை எனில், அந்தச் சீட்டை அங்கேயே இரண்டாக, நான்காக, எட்டாக,
பதினாறாகக் கிழித்துப்போட்டுவிடுவார்.
* உடல் எடை குறைக்க நடைப் பயிற்சி அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஆனால், வேலைப் பளு காரணமாக போயஸ் கார்டனில் நடக்க முடிவது இல்லை. இதனால் கொடநாட்டுக்கு செல்லும் போது நடைப் பயிற்சி செய்வார்.
* சுயசரிதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், நடக்கவில்லை.
* ஜெயலலிதாவின் எழுத்தாற்றல் திறன் யாருமே அறியாதது. நடித்துக்கொண்டு இருந்தபோது நிறைய எழுதியிருக்கிறார். கல்கியில் தொடராக வெளியான 'உறவின் கைதிகள்' நாவல் ஒரு நடிகனுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டது. கர்ப்பத்தில் கைகோக்கும் காதல் ஜோடிக்கு இறுதியில் தாங்கள் தந்தை மகள் உறவு எனத் தெரிய வருவதாக, அப்போதே துணிச்சல் திருப்பங்களுடன் நாவலைப் படைத்தார்.
* கிளாஸிக் பாடல்களின் தொகுப்பாக ஜெயா 'டிவி-'யில் ஒளிபரப்பாகும் 'தேன் கிண்ணம்' நிகழ்ச்சியில் ஜெயலலிதா 'டிக்' அடித்துத் தரும் பாடல்கள்தான் ஒளிபரப்பாகும்.
* ஜெயா 'டிவி' செய்தி வாசிப்பாளர்களின் உச்சரிப்பை உன்னிப்பாகக் கவனிப்பார். 'சுப்பிரமணிய சாமி இல்லை… சுவாமி, ஹில்லாரி இல்லை ஹிலாரி, சோ இல்லை சோ ராமசாமி' என சின்னச் சின்னத் திருத்தங் களை சொல்வார்.
ஜெயலலிதா என்னும் எழுத்தாளர்
எண்பதுகளில் 'எண்ணங்கள் சில' என்னும் தொடர் எழுதினார் அதனைத் 'துக்ளக்கில்' எழுதியிருக்கின்றார்.
'தாய்' வார இதழில் 'எனக்குப் பிடித்த ஊர்', 'எனக்குப் பிடித்த வாத்தியார்', 'எனக்குப் பிடித்த ஓவியர்', 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்', 'எனக்குப் பிடித்த நாவல்', 'எனக்குப் பிடித்த தத்துவ ஞானிகள்' என 45 கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவையே 'மனதைத்தொட்ட மலர்கள்' என்ற நூலாக வெளிவந்தது. மேற்படி நூலில் தனக்குப் பிடித்த ஓவியராக லியனார்டோ டாவின்சியை குறிப்பிட்டிருக்கின்றார் தனக்குப் பிடித்த நாவலாக சார்லஸ் டிக்கன்ஸின் 'டேவிட் காப்பர்பீல்ட்' டைக்குறிப்பிட்டிருப்பார். பதினாறு பக்கங்களில் நாவலைச்சுருக்கமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பார். 1968ல் பொம்மை இதழுக்காக எம்ஜிஆரிடம் நேர் காணல் எடுத்திருக்கின்றார். 63 கேள்விகளை அவரே தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்திருக்கின்றார்.'
ஜெயலலிதா எழுதிய நாவல்கள்
ஜெயலலிதாவின் நாவல்கள் இரண்டு கல்கியிலும், குமுதத்திலும் வெளிவந்ததாக அறிய முடிகிறது. கல்கியில் அவர் எழுதிய நாவலின் பெயர் 'உறவின் கைதிகள்'.
'துக்ளக்'கில் வட இந்தியாவில் காவல்துறையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருத்தி பற்றிய விரிவான செய்திக் கட்டுரையொன்றினைத் தொடராக ஆரம் பத்தில் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார்.
சென்ற நாடுகள்
அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜெயலலிதா பயணம் செய்துள்ளார்.
புத்தகங்கள்
ஜெயலலிதா ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும் பல சிறு கதைகளும் எழுதியுள்ளார்.
விளையாட்டுகளில் ஈடுபாடு
கிரிக்கெட், டென்னிஸ், நீந்துதல், குதிரை ஏற்றம், கூடைப்பந்து, சதுரங்கம், உடற்பயிற்சி விளையாட்டுகள் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.
செல்ல பெயர்கள்
* 'அம்மு' என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க., வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.
* புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்படுகிறார்.
விருதுகள்
* 'பட்டிக்காடா பட்டணமா' மற்றும் 'சூரியகாந்தி' ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ் நடிகைக்கான 'பிலிம்பேர் விருது,
* சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது 'ஸ்ரீ கிருஷ்ணா சத்யா' என்ற படத்துக்காக வழங்கப்பட்டது.
* 1972ல் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் பெற்றுள்ளார்.
* 2004ல் ஆசிய சபையின் 'பத்தாண்டின் சிறந்த அரசியல் பெண்மணி' விருது.
* 2004: இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை பாதுகாத்தல் ஆகியவற்றில் சேவை புரிந்தமைக்காக, தங்கத் தாரகை விருது சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு குழுவினால் வழங்கப்பட்டது.
* 2011 : சிறந்த சேவை மற்றும் ஆளும் திறமையை பாராட்டி அமெரிக்காவின் நியு ஜெர்ஸி பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.

